உச்சநீதிமன்றமே சொல்லியாச்சு! இனி சிறப்பு முகாம் எதற்கு? விடுதலை காற்றை சுவாசிக்கட்டும்.. வன்னியரசு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்தவர்களை உச்சநீதிமன்றமே விடுதலை செய்த பிறகும் அவர்களை திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வது அநீதியாகும் என வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச் செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றமே விடுதலை செய்த பிறகும் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வது அநீதியிலும் அநீதியாகும்.
அவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்வதை முதல்வர் ஸ்டாலின் தடுத்து, அவரவர் விரும்பும் இடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும். விடுதலை காற்று சுவாசிக்கட்டும்! இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.

7 தமிழர்கள்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிசந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரும் தங்களது தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்த நிலையிலும் அவர்கள் ரிலீஸ் செய்யப்படவில்லை.

தமிழக சட்டசபை
இந்த நிலையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் படி தமிழக சட்டசபையில் இரு முறை தீர்மானம் நிறைவேற்றி அவை ஆளுநருக்கு அனுப்பியும் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தினார். இதனிடையே பேரறிவாளன் தனது விடுதலையை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து 142 சட்டவிதிபடி பேரறிவாளனை விடுதலை செய்தது.

தமிழக அரசு மும்முரம்
அதன்படி மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு மும்முரம் காட்டி வந்தது. தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட 6 தமிழர்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நளினி அவரது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நகல்
உச்சநீதிமன்ற நகல் கிடைத்தவுடன்தான் அவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்படவிருந்தனர். ஆனால் நளினியை விடுதலை செய்வதற்கான நகல் கிடைத்துவிட்டதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு வேனில் அழைத்து செல்லப்பட்டனர். உச்சநீதிமன்றமே விடுதலை செய்யும்படி உத்தரவிட்டும் அவர்களை வெளியே விடாமல் மீண்டும் ஓர் இடத்திற்கு அழைத்து செல்வதைத்தான் வன்னியரசு கண்டித்துள்ளார்.












Click it and Unblock the Notifications