வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து... உயர்நீதிமன்றத்தின் 7 வினாக்களும்... ராமதாஸ் அளித்துள்ள பதில்களும்..!
சென்னை: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றம், 7 வினாக்களை எழுப்பியிருந்த நிலையில் அதற்கு தமது உள்ளத்திலிருந்து பதில் அளிப்பதாக கூறி பதிவு வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் மனு நீதி சோழனின் சிலை அமைந்துள்ள அந்த வளாகத்தில் நீதி வழுவிய தருணங்களும் பல உண்டு எனவும் ராமதாஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;
விமர்சனம்
''வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்பது நிறுவுவதற்காக 7 வினாக்களை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அவற்றுக்கு தமிழக அரசுத் தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வினாக்களுக்குள்ளாகவே ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. வினாக்கள் விடை தேடுவதற்காக எழுப்பப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, விடையை நியாயப்படுத்துவதற்காக வினாக்கள் தயாரிக்கப்பட்டதாகத் தான் தோன்றுகிறது.''
வினாவும் விடையும்
வினா: 1. 2018-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102-ஆவது திருத்தமும், 2021-ஆம் ஆண்டில் 105-ஆவது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா?
ராமதாஸ் விடை: சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள முதல் வினாவுக்கான விடை மிகவும் எளிதானது. 102-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திருத்தம் ஆகும்.
102-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி 340 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருந்தது. அப்பிரிவு மத்திய ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது தொடர்பானது தானே தவிர, இச்சட்டத் திருத்தத்தால் மாநில அரசுகளில் அரசுகளின் அதிகாரம் எந்த வகையிலும் பறிக்கப்படவில்லை என்பதை விளக்குவது தாம் 105-ஆவது திருத்தத்தின் நோக்கம் ஆகும். அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சட்டத் திருத்தங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
அதுமட்டுமல்ல.... வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள். அப்போது 102-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. அதனால், 102-ஆவது திருத்தம் வன்னியர் இட ஒதுக்கீட்டை எந்த வகையிலும் பாதிக்காது.
வினா 2. ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா?
ராமதாஸ் விடை: 2008-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் பிற்படுத்தப் பட்ட வகுப்பில் தலா 3.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டது. ஆனால், இந்த இரு நிகழ்வுகளிலும் ஒன்பதாவது அட்டவணையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலும் பெறப்படவில்லை.
2009-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போதும் ஒன்பதாவது அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் மட்டும் இத்தகைய வினாக்கள் எழுப்பப்படுவது ஏன்?
வினா 3. அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
ராமதாஸ் விடை: அரசியலமைப்புச் சட்டத்தை புறக்கணித்து விட்டு எந்தப் பிரிவுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338-பி பிரிவு என்பது 102-ஆவது திருத்தம் மூலம் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டதாகும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் வழங்குவது தான் இந்தப் பிரிவின் நோக்கம் ஆகும். மாநில அளவில் ஓபிசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் அதிகாரம் உள்ளது. அதனால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடை இல்லை.
வினா 4. சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
ராமதாஸ் விடை: முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மண்டல் தலைமையிலான மண்டல் ஆணையம் ஆகியவையும் சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் ஈழவர்கள் எனப்படும் தனித்த சாதிக்கு 14% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நாடார்கள், விஸ்வகர்மாக்கள், தீவராக்கள் என தனிப்பட்ட சாதிகளுக்கு தனித்தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சாதி அடிப்படையிலோ, தனிப்பட்ட ஒரு சாதிக்கோ இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.
வினா 5. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?
ராமதாஸ் விடை: வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரிப்பது ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமூகத்தினரின் சமூக நிலையை இறக்கியோ, ஏற்றியோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் அதே நிலையில், அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற நிலையில் வைத்து தான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனால், அவர்களின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை ஆகியவை தேவையில்லை. மூன்று பிரிவினருக்கும் அவர்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அவர்களின் மக்கள்தொகை குறித்த புள்ளி விவரம் மட்டும் போதுமானது.
வினா 6. வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா?
ராமதாஸ் விடை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகள் சம வாய்ப்பை வலியுறுத்தும் பிரிவுகள் ஆகும். ஒரே நிலையிலான வகுப்பினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எந்த வகையிலும் மீறவில்லை.
வினா 7. எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா?
ராமதாஸ் விடை: உயர்நீதிமன்றத்தின் இந்த வினா ஏற்கனவே எழுப்பப்பட்ட ஐந்தாவது வினாவிற்கு எதிரானது ஆகும். அந்த வினாவில் மக்கள்தொகை உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று வினா எழுப்பிய உயர்நீதிமன்றம், இப்போது அந்த புள்ளி விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று வினவுவது எவ்வளவு முரண்பாடு?
ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமூகத்தினரின் சமூக நிலையை இறக்கியோ, ஏற்றியோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் அதே நிலையில், அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற நிலையில் வைத்து தான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனால், இதற்கு எந்த நோக்கக் காரணங்களும் தேவையில்லை.
இவ்வாறு வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகளுக்கு ராமதாஸ் பதில் அளித்திருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications