ஜெ. மேல் கொங்கு மக்களுக்கு அவ்வளவு பாசம்! ஓபிஎஸ்ஸை விசாரிக்காதது ஏன்? சசிகலா பலிகடாவா? பறந்த அறிக்கை
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளும், ஆதாரமற்ற அவதூறுகளும் அவர் மறைந்த முதல் நாள் முதல் இன்று வரை நீடித்து கொண்டே இருக்கிறது எனவும், ஓபிஎஸ் முதல்வர் பதவியை விட்டு விலகியதும் மர்மம் என சொல்வதன் உள் நோக்கத்தை ஆணையம் விசாரிக்காதது ஏன்? என கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே அவர் தான் என்பது போல அறிக்கை இருப்பதாக ஜெ.ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
சசிகலா மட்டுமல்லாது,முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்க்கு சிக்கல்
இந்நிலையில் ஓபிஎஸ்-ஐ ஆணையம் விசாரிக்காதது ஏன்? என கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தீர்க்கமான முடிவு, உறுதியான தன்மை, தொலை நோக்கு சிந்தனை, தமிழ்நாட்டு மக்கள் மீது பேரன்பு என்று இருந்தவர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்! குறிப்பாக கொங்கு மண்டலமும், கொங்கு பகுதி மக்களும் மிகுந்த அன்பை அவர் மீது வைத்திருந்தனர், அவரும் அந்த மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.. அப்படிப்பட்ட தலைவர் மரணத்தில் இத்தனை அவதூறுகளை அள்ளி வீசுவது ஏற்புடையது அல்ல!

அள்ளி தெளித்த கோலம்
ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை முழுமையான அறிக்கையாக இல்லை... அவசர அவசரமாக அள்ளி தெளித்த கோலமாகவே உள்ளது! ஜெ. மரணத்தின் போது முதல்வராக இருந்த OPS'ஐ விடுவித்து விட்டு அவருக்கு கீழ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணனை மட்டும் சேர்த்திருப்பது எப்படி சரியாகும்! மறைந்தவர் முன்னாள் முதல்வர், ஆட்சியில் உள்ள கட்சியில் அதிகாரமிக்க பொதுச்செயலாளர், இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் சக்திமிக்க பெண் தலைவர் ஆவார். அப்படிப்பட்ட தலைவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை பற்றி ஏன் முதல்வராக இருந்த OPS கண்டு கொள்ளவில்லை?

ஜெயலலிதா
ஒரு நாள் முன்பே ஜெயலலிதா அவர்கள் இறந்து விட்டதாக ஆணையம் சொல்லும் போது அப்போதய முதல்வர் OPS ஏன் மவுனம் காத்தார்? எனவே அவரிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் அவரது பெயரை முதன்மையாக சேர்க்க வேண்டும்! அப்பல்லோ நிர்வாகத்தையும், மருத்துவர் சிவக்குமாரையும், வி.கே சசிகலா அவர்களையும் சேர்த்த ஆணையம். ஜெயலலிதா அவர்களின் நெடுநாளைய தொடர் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டதா? மருத்துவமனையில் மரணமடைந்தவரை கொலை செய்யப்பட்டார் என்பது போல சித்தரிக்க முயல்விப்பது யாரை மகிழ்விக்க?

அடுத்தடுத்து கேள்விகள்
ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்தது சரியா என்று இன்னொரு ஆணையம் வைக்கும்படி தான் அவரது அறிக்கை உள்ளது! முழுமையான ஆதாரம் எதையும் சமர்ப்பிக்காமல் திரைக்கதை போல விசாரணை அறிக்கையை சமர்ப்பித்திருப்பது முழுமையற்ற அறிக்கையாகும்! ஆறுமுகசாமியை நீக்கிவிட்டு வேறு ஒரு நீதியரசரை வைத்து இதை விசாரிக்க வேண்டும்! முழுமையாக OPS ஐ விசாரிக்க வேண்டும்.. அவர் தான் முதலில் மர்மம் என்று சொன்னார், அவர் தான் அந்த சமயத்தில் முதல்வராகவும் இருந்தார்! ஏன் அந்த சமயத்தில் மவுனம் காத்தார்? ஓபிஎஸ் முதல்வர் பதவியை விட்டு விலகியதும் மர்மம் என சொல்வதன் உள் நோக்கத்தை ஆணையம் விசாரிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications