“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்!
சென்னை: காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது தான் போட்டியிடவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். தனக்கு பதில் வேட்பாளராக ஜோதிமணி என்பவர் களமிறங்குவார் என்று கூறியிருந்தார். ஆனால், தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் ஜோதிமணி என்று கூறியிருப்பது பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.
தனக்கு பதில், மறைந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இல. இளையபெருமாளின் மகன் ஜோதிமணியை வேட்பாளராக திருமாவளவன் அறிவித்திருந்தார்.

நான் காங்கிரஸ் கட்சிக்காரன்
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜோதிமணி பேசியதாவது, "எனக்கு திடீரென்றுதான் இந்த தகவல் வந்தது. யாரும் என்னிடம் இது குறித்து கேட்கவில்லை. இருப்பினும் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டு நான் விருப்ப மனுவை கொடுத்திருந்தது உண்மை. காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுத்திருந்தேன். இப்படி இருக்கையில் திடீரென திருமாவளவன் அறிவித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருமாவளவனுக்கு நன்றி
நான் இப்போது காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். காங்கிரஸும், விசிகவும் திமுக உடனான கூட்டணியில்தான் இருக்கின்றன. எனவே இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்தாலோசித்து, அவர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். நான் எந்த இயக்கத்தில் இருந்தாலும் எனக்கு வாய்ப்பளித்த திருமாவளவனுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துக்கொண்டு, ஏன் சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன.
திருமாவளவன் விளக்கம்
இது குறித்து திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். அவர் பேசியதாவது, "நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னதும், உடனே என்னென்னவோ வதந்திகள் கிளம்பின. திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை கோருகிறார். அப்படியிருப்பவர், இந்த முறை தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம்தான் அமையும் என்பது கணித்திருக்கிறார் எனவும், எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி, துணை முதலமைச்சர் பதவியை வாங்க ஆசைப்படுகிறார் என்றும் வதந்திகள் கிளம்பியிருக்கின்றன.
எம்எல்ஏ பதவி
எனக்கு அப்படியான எந்த ஆசையும் இல்லை. இந்த தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை நான் வலியுறுத்தவில்லை. காரணம், இந்த டிமாண்ட் கூட்டணிக்குள் குழப்பதை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நினைத்திருந்தேன். எனவேதான் இதை இந்த தேர்தலில் நான் இந்த டிமாண்டை முன் வைக்கவில்லை. அப்படி இருக்கும் எனக்கு, எப்படி துணை முதல்வர் பதவி குறித்த ஆசை வந்திருக்கும்? பதவி மீது ஆசை இருந்தால், நான் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தபோது எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?
ராஜதந்திரம் இது
எனவே என்னுடைய நகர்வை கொச்சைப்படுத்திய காரணத்தினால், நான் போட்டியிடவில்லை. நான் போட்டியிட இருந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியில், மறைந்த இளையபெருமாள் ஐயாவின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார். யுத்தத்தில் பின்வாங்குவதும் ராஜதந்திரம்தான். அவதூறுகளை முறியடிக்க இந்த முடிவை எடுக்கிறேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications