விஜய் உடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் முக்கிய பொறுப்பு.. மீட்டிங்கில் நடந்தது என்ன?
சென்னை: விசிகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சில மாதங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார். தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் உடன் சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின், ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விசிகவில் இணைந்தவர் ஆதவ் அர்ஜுனா. தனது வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத்தின் மூலமாக விசிகவின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி பலரின் கவனத்தையும் திருப்பினார். இதன்பின் அவருக்கு விசிகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதன்பின் ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார்.

இதனிடையே ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆஃப் காமன் தரப்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது. அந்த விழாவிற்கு நடிகர் விஜய் அழைக்கப்பட்டார். இதனால் திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அந்த நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எந்தக் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய்-ஐ ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளார்.
ஒரு பக்கம் நிர்வாகிகள் நியமனத்தில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே முதற் கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களும், 2ஆம் கட்டமாக இன்று 19 மாவட்டச் செயலாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் அனைத்து மாவட்டங்களுக்குமான நிர்வாகிகளை நியமிக்க விஜய் மும்முரமாக இருந்து வருகிறார்.
அதன்பின் அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பில் முதலாமாண்டு நிறைவு விழாவை அந்தந்த மாவட்டங்களில் நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர். இதன் மூலம் கட்சியின் நிர்வாகிகளும் அந்தந்த மாவட்ட தொண்டர்களுக்கு எளிதாக அறிமுகம் செய்து வைக்கப்படுவர். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலமான கட்டமைப்பை உருவாக்க விஜய் முயற்சித்து வருகிறார்.
அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் அக்கட்சியின் முதலாமாண்டு நிறைவு விழாவில் வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தின் வலுவான கட்டமைப்பை உருவாக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசிகவில் ஏற்கனவே துணை பொதுச்செயலாளராக பணியாற்றிய அனுபவம் இருப்பதோடு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகளையும் ஆதவ் அர்ஜுனா செய்துள்ளார். இந்த அனுபவம் காரணமாக பூத் கமிட்டி முதல் மாவட்ட கட்டமைப்பை பலப்படுத்துதற்கு தேவையான பொறுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய் மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு பின் அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் புதியவர்கள் தான். இதனால் அனுபவம் வாய்ந்த சிலரை பயன்படுத்தி புதியவர்களையும் எளிதாக பயணிக்க வைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆதவ் அர்ஜுனா லாட்டரி மார்ட்டினின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications