டாஸ்மாக்குக்கு எதிராக அன்று ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி போராடினார்களே..சீண்டும் விசிக சங்கத் தமிழன்!
சென்னை: மது ஒழிப்பை வலியுறுத்தி கறுப்புச் சட்டையுடன் வீட்டு முன்பாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் போராடியவர்கள்தானே.. அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கட்டுமே.. பாராட்ட தயாராக இருக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சங்கத் தமிழன் தெரிவித்துள்ளார்.
நமது ஒன் இந்தியா தமிழுக்கு மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக சங்கத் தமிழன் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: மது ஒழிப்பு மாநாட்டை ஏன் திடீரென நடத்துகிறீர்கள்? என கேள்வி கேட்பது சரியில்லை. அப்படியானால் காந்தி ஏன் திடீரென நாட்டுக்கு சுதந்திரம் தேவை என போராடினார் என கேட்பதா? புத்தருக்கு ஏன் அன்றே ஞானம் வரவில்லை என கேள்வி கேட்பதா?

மது ஒழிப்புக்காக சசிபெருமாள் போராடிய போது அவருடன் உடன் நின்றவர்கள் நாங்கள். 2015-ல் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த அத்தனை தலைவர்களும் சசிபெருமாள் உடலுக்கு மரியாதை செலுத்தினோம். மதுவிலக்கு கொள்கையில் விசிக எப்போதும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் பூரண மதுவிலக்கு தேவை என்பது அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமே மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்து குறைக்கவும் செய்தார். இன்று புரட்சித் தமிழர் என அழைக்கப்படுகிற எடப்பாடி பழனிசாமியும், திருமாவளவன் கோரிக்கையை ஏற்று மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என குரல் கொடுக்கட்டும் .. ஆஹா உண்மையான புரட்சித் தமிழர்தான்.. சரியான பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என பாராட்டுவோம்.
இதே முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி, முதல்வரின் சகோதரி கனிமொழி உள்ளிட்டோர் கறுப்பு உடையுடன் வீட்டின் முன்பாக பதாகைகளை ஏந்தி மது ஒழிப்புக்காக குரல் கொடுத்தார்கள்தானே.. விசிக இளைஞரணிச் செயலாளர் என்ற முறையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாமே..
முதல்வ மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பிய உடன், திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று படிப்படியாக தமிழ்நாட்டில் மதுக் கடைகளை மூடுவோம் என அறிவிக்கட்டுமே.. நிச்சயமாக நாங்கள் பாராட்டுவோம்.. விசிக பாராட்டத்தான் செய்யும். இவ்வாறு சங்கத் தமிழன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications