ராமதாஸ் ஆரம்பத்துல எப்படி இருந்தார் தெரியுமா.. கால் தவறியது எங்கே.. திருமாவளவன் ஆவேச பேச்சு
பாமக டாக்டர் ராமதாஸ் குறித்து திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்ப காலகட்டத்தில் பெரியார் மற்றும் மார்க்சிய கொள்கைகளில் ஈடுபாடு உடையவராக காணப்பட்டார் என்றும், அகில இந்திய அளவில் கன்ஷிராம் போன்ற உயர்ந்த தலைவர் இடத்தில் அமர வேண்டியவர் இப்போது 60 சீட்டுக்கள் என்று சுருங்கி கிடக்கிறார்" என்றும் விசிக தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீதும் பாஜகவினர் நடத்திய வன்முறையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமல்லாது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் கலந்துகொண்டன.

உள்ளாட்சி தேர்தல்
அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "உள்ளாட்சி தேர்தலுக்கான வன்முறை திரிபுராவில் நடந்துள்ளது.. கடந்த இடதுசாரிகளின் ஆட்சி வரலாற்றை அழிக்கும் வகையில் சிலைகளை உடைக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது.. சங்பரிவார் அமைப்புகளின் செயல்திட்டம் தான் பாஜக செயல்படுத்தி வருகிறது. அதனால் தான் பாஜகவை எதிர்க்கிறோம். பாஜகவின் செயல்பாட்டை சங்பரிவார் அமைப்பே முடிவு செய்கிறது. வேளாண் சட்ட திரும்ப பெறுதலில் சங்பரிவார் முடிவு இருக்கும்.

பாஜக வன்முறை
திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள், இடதுசாரிகள் மீது பாஜக வன்முறையை கட்டவிழ்த்து தாக்குதல் நடத்தி வருகிறது, அங்கு அமைதி இல்லை... தொடர்ந்து பாஜக அரசு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சிலைகளை உடைத்து, கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறது. வலிமைமிக்க சக்திகளால் இங்கே வளர்ந்து வந்தவர்களை எல்லாம், பாஜகவின் நச்சு அரசியலால் நீர்த்து போய் கொண்டிருக்கிறார்கள்.. ஒரு பேட்டியில் என்னை கேட்டார்கள், ராமதாஸை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று? அதற்கு நான் சொன்னேன்,

சங்பரிவார்
பாமக நிறுவனரான ராமதாஸ் ஆரம்ப காலகட்டத்தில் பெரியார் மற்றும் மார்க்சிய கொள்கைகளில் ஈடுபாடு உடையவராக காணப்பட்டார்.. அதன்பின்னர் சமுதாய அரசியலில், சங்பரிவார் அமைப்பு விரித்த வலையில் சிக்கி சங்பரிவார்கள் அமைப்பின் செயல்திட்டத்தை இவர் காப்பியடித்து தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டார்.. அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார்.. ஏனென்றால், பாஜக விரித்த வலையில், சங்பரிவார் கும்பல் விரித்த வலையில் சோஷியல் என்ஜினியரிங் என்ற அந்த சதித்திட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, களமிறங்கியதன் விளைவாக, இன்றைக்கு 60 சீட்டுக்கள் வென்றால் போதும் என்று சுருங்கி கிடக்கிறார்..

கன்ஷிராம்
அகில இந்திய அளவில் கன்ஷிராம் போன்ற உயர்ந்த தலைவர் இடத்தில் அமர வேண்டியவர் ராமதாஸ்... அவரை இடதுசாரிகள் எல்லாம் அரவணைத்து தூக்கி கொண்டு வந்தோம்.. 80 வாக்கில் தேர்தல் அரசியலில், ராமதாஸை தோளில் தூக்கி சுமந்தவர்கள் மார்க்சியவாதிகளும், லெனினியவாதிகளும்தான், பெரியாரியவாதிகளும், அம்பேத்கரிகளும்தான்..

நிலை என்ன?
நமக்கொரு மாற்று தலைவன் கிடைத்துவிட்டார்.. இனி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக இவரை உயர்த்திப்பிடிப்போம் என்று உயர்த்தினார்கள்.. அவரும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்.. நம்பிக்கையை தந்தார்.. பழனிபாபா, ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றவர்கள் எல்லாரும் உடனிருந்தார்கள்.. எத்தனையோ அறிவுஜீவிகள் உடனிருந்தார்கள்.. இன்றைக்கு நிலை என்ன? எங்கே அவர் கால் தடுமாறியது? சங்பரிவார் விரித்த வலையில்தான் தவறியது.. சோஷியல் என்ஜினியரிங் என்ற தவறான கோட்பாட்டில் தவறியது.

பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராக எச் ராஜா அவர்களே இருந்திருப்பார்.. 2024 பாஜக மறுபடியும் வந்து விட்டால், இந்த நாட்டின் பெயரே மாற்றப்படும்... நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

இஸ்லாமியர்கள்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து திரிபுராவில் சமூக அமைதி இல்லை... கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்த பாஜகவினர் தற்போது இசுலாமியர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்... வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைக்கு சம்பந்தமே இல்லாமல் திரிபுராவில் வன்முறை நடத்தப்படுகிறது... இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வன்முறை சம்பவங்களை மத்திய அரசு அரசு கைக்கட்டி வேடிக்கை பார்த்து மறைமுகமாக ஊக்குவிக்கிறது... மனித உரிமை ஆர்வலர்கள் மீது போடப்பட்ட முறையற்ற வழக்குகளை திரும்ப பெற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications