அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்: யார் SIR என ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஏன் விசாரிக்க கூடாது? வன்னி அரசு
சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் தொடர்புடைய SIR யார் என்பது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.யிடம் ஏன் விசாரிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் வன்னி அரசு.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில் ஞானசேகரன் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில் ஞானசேகரன் "SIR" என ஒருவரை குறிப்பிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் தந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதேநேரத்தில் யார் அந்த SIR என்பதை முன்வைத்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போஸ்டர்கள் முதல் போராட்டங்கள் வரை நடத்தி வருகின்றன. அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக என அனைத்து அரசியல் கட்சிகளும் அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் உண்மை குற்றவாளியான "SIR" யார் என்பது குறித்து கேள்வி எழுப்புகின்றன. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என நேற்று பாமக வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டும் வைத்திருந்தது.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, புதிய தலைமுறை டிவி விவாதத்தில் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் பாலியல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கின்றனர்; அந்த கோணத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடமும் யார் அந்த SIR என்பது குறித்து விசாரணை நடத்தலாமே என கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறை டிவி விவாதத்தில் வன்னி அரசு கூறியதாவது: 2017-ம் ஆண்டு மேகாலயா ஆளுநராக இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சண்முகநாதன், பாலியல் சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார். தற்போதைய மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த தாஸ் மீதும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தும் இதேபோல பாலியல் சர்ச்சையில் சிக்கினார். பன்வாரிலால் புரோஹித் விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இப்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் தற்போதைய தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவியிடமும் யார் அந்த SIR என்பது குறித்து விசாரணை நடத்தலாமே.. இந்த விவகாரத்தில் ஆளுநரை தப்பி வைக்கக் கூடாது. இவ்வாறு வன்னி அரசு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications