திருச்சி எஸ்பி வருண் குமாரை மிரட்டும் யாரையும் விட்டுவிடாதீங்க.. சீமானுக்கு எதிராக விசிக வன்னி அரசு!
சென்னை: திருச்சி எஸ்பி வருண்குமாரை ஜாதிய அடையாளத்துடன் விமர்சித்து அவரது குடும்பத்தினரை இழிவுபடுத்தும் சமூக விரோதிகள் அனைவர் மீதும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சி எஸ்பி வருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் 22 நிர்வாகிகள் மீது திருச்சி போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து இழிவாக பாட்டுப் பாடினார் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். இதனையடுத்து சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் பேசியதாக கூறப்படும் செல்போன் உரையாடல்கள் அடுத்தடுத்து வெளியாகின. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமான், திருச்சி எஸ்பி வருண் குமார் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். அதேபோல நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் திருச்சி எஸ்பி வருண் குமாரை சமூக வலைதளங்களில் மிக இழிவாக விமர்சித்து கொலை மிரட்டல்கள் விடுத்தனர்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் தமக்கு மிரட்டல் விடுத்தவர்கள் யார் யார்? என்ன மாதிரியான மிரட்டல்கள் விடுக்கப்பட்டன? என்பதை விரிவாக திருச்சி எஸ்பி வருண் குமார், திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகாராக கொடுத்தார். இந்த மிரட்டல், அவதூறுகளை தூண்டிவிட்டதாக சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் மீதும் திருச்சி எஸ்பி வருண் குமார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி எஸ்பி வருண்குமார் புகார்- சீமான், சாட்டை, இடும்பாவனம் உட்பட 22 நாம் தமிழர் மீது வழக்கு!
இந்த நிலையில் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரும் கைது செய்யப்படலாம் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சற்று முன்னர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருச்சி எஸ்பி வருண் குமார், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காவல்துறையால் யார் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ இல்லையோ தலித்துகள்,சிறுபான்மை மற்றும் பெண்கள தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசார் மீது கடுங்கோபம் கொள்வதற்கான அத்தனை காரணங்களும் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் உண்டு.ஆனாலும் சட்டப்பூர்வமாகவும் கண்ணியமாகவுமே 'விமர்சிக்கிறோம்.
மேடைகளில் போலீசாரின் 'காட்டுமிராண்டித்தனம்’ என மனித உரிமை காப்பாளர்கள் கூடுதலாக விமர்சனம் வைப்பார்கள்.
ஆனால்,ஒருபோதும் அவர்களது குடும்பத்தினரை யாரும் இழிவாக விமர்சித்ததில்லை; அச்சுறுத்தியதுமில்லை. ஆனால், திருச்சி காவல்துறை அதிகாரி எஸ்பி வருண்குமாரையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. காவல்துறை அதிகாரியின் போக்கு குறித்து விமர்சிக்கலாம். ஆனால்,அவரது குடும்பத்தினர் என்ன தவறு செய்தார்கள்? தனிப்பட்ட முறையிலும் சாதிய அடையாளத்தோடும் திரு.வருண்குமார் அவர்களை இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல; கண்டிக்கத்தக்கதாகும். இச்செயலில் ஈடுபடும் சமூகவிரோதிகள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications