அதிராம்பட்டினத்தில் அதிர்ச்சி.. “முதியவரை சாலையிலேயே அடித்து கொன்ற போலீஸ்!” வன்னியரசு பரபர புகார்
சென்னை: அதிராம்பட்டினம் அருகே மது கடத்தியதாக கூறி முதியவரை போலீஸ் அடித்து கொலை செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி அதிராம்பட்டினத்தை அடுத்த துவரங்குறிச்சியில் மீன் வியாபாரம் செய்து வரும் வீரையன் என்பவர், சக்திவேல் என்பவரும் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு செல்லும்போது, அடையாளம் தெரியாத நபர் பைக்கை வழிமறித்து மதுவை கள்ளச்சந்தையில் விற்கிறீர்களா என்று கேட்டு தரக்குறைவாக பேசியதுடன், வீரையனை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

நீங்கள் யார் என சக்திவேல் கேட்டபோது பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு தலைமை காவலர் குணசீலன் என கூறி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாகவும் அவரது மகன் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார். கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்த வீரையனை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், அதன் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வீரையனின் மகன் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, துவரங்குறிச்சியை சார்ந்த பெரியவர் வீரையன்.
கடந்த 27.9.2023 அன்று மீன் சந்தையில் மது விற்றதாக குற்றம் சுமத்தி போலீசார் அடித்து இழுத்துச்சென்று உள்ளனர். தலைமை காவலர் குணசீலன் தலைமையிலான போலீசார் அடித்த அடியில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார் வீரையன்.
தஞ்சை மாவட்டம்- பட்டுக்கோட்டை- துவரங்குறிச்சியை சார்ந்த பெரியவர் வீரையன்.
— வன்னி அரசு (@VanniKural) September 30, 2023
கடந்த 27.9.2023 அன்று
மீன் சந்தையில் மது விற்றதாக குற்றம் சுமத்தி போலீசார் அடித்து இழுத்துச்சென்றுள்ளனர்.
தலைமை காவலர் குணசீலன் தலைமையிலான போலீசார்
அடித்த அடியில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார் வீரையன்.… pic.twitter.com/M7hp9GhKzn
உடனே அருகே இருந்தவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சையின் போதே இறந்துள்ளார். விசாரணைக்கு காவல் நிலையம் கூட அழைத்துச் செல்லாமல் தெருவிலேயே அடித்து படுகொலை செய்துள்ள இப்போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் காவல்துறையினரே செய்துள்ளனர்.
கடந்த 28 ம் தேதி வீரையன் குடும்பத்தினரோடு முத்தரையர் சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தமிழர் தேசம் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், இதுவரை வீரையன் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.
வீரையன் சாவுக்கு காரணமான தலைமை காவலர் குணசேகரன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். படுகொலையான வீரையன் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்புக்குள்ளான வீரையன் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications