திமுக எதிர்ப்பு.. தவெக பாதையில் பயணிக்க தொடங்கிய விசிக.. அமைச்சர் வன்னி அரசு பேச்சின் பின்னணி!
சென்னை: தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள விசிக, தற்போது தவெக பயணித்து வரும் திமுக எதிர்ப்பு ரூட்டில் பயணிக்க தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. சட்டசபையில் வன்னி அரசு மற்றும் பொது மேடைகளில் திருமாவளவன் என்று விசிகவின் முக்கிய தலைவர்கள் திமுகவை அட்டாக் செய்ய தொடங்கி இருக்கின்றனர். இதற்கான பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
சட்டசபையில் சமூகநீதித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், தலித்தை பொதுத்தொகுதியில் நிறுத்தினோம் என்று திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். என்னை பொறுத்தவரை நீங்கள் பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுவதை போலத்தான் தெரிகிறது. கடந்த முறை விசிக சார்பாக 4 எம்எல்ஏ-க்கள் அவையில் இருந்தோம்.

அப்போது ஏன் அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் விட்டீர்கள்? இப்போது 2 எம்எல்ஏக்கள் இருந்தாலும், அமைச்சரவையில் இருக்கிறோம் என்றார். வன்னி அரசின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தேர்தலின் போது தனது வெற்றியை விடவும் வன்னி அரசு அண்ணனின் வெற்றி முக்கியம் என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இருப்பினும் சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசின் பேச்சு திமுகவினரை தொடர்ந்து சீண்டுவதை போலவே இருந்து வருகிறது. மறுபக்கம் விசிகவில் ஆளூர் ஷாநவாஸ் தவிர்த்து வேறு எந்த நிர்வாகியும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இல்லை. விசிக தலைவர் திருமாவளவன் உட்பட அனைவருமே கொஞ்சம் கொஞ்சமாக திமுக எதிர்ப்பு என்ற ரூட்டில் பயணிக்க தொடங்கி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
தவெக உடனான கூட்டணியை உறுதி செய்த திருமாவளவன், திமுகவை மறைமுகமாக சாட தொடங்கி இருக்கிறார். குறிப்பாக அதிகாரத்தில் இடம் கொடுக்கவில்லை என்பதை விசிக கூட்டங்களில் அழுத்தமாக பேசி வருகிறார். அதேபோல் திமுகவினர் தான் தங்களை அட்டாக் செய்கின்றனர் என்பதையும் பேசுவதை தொடர்கிறார். மறுபக்கம் சங்கத்தமிழன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோரும் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
இதன் மூலமாக விசிக கொஞ்சம் கொஞ்சமாக தவெகவின் திமுக எதிர்ப்பு அரசியலில் கலப்பதாக அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். தவெக கூட்டணியில் இருப்பதால், திமுக எதிர்ப்பு அரசியல் தான் எடுபடும் என்பதையும் விசிகவினர் புரிந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப தலித் பிரச்சனைகளில் திமுக கோட்டைவிட்ட இடங்களையும் விசிக பேசத் தொடங்கி இருக்கிறது. இதனால் திமுக உடன் சுமார் 9 ஆண்டு காலம் தொடர்ந்து விசிக பயணித்ததை போல், தவெக உடனும் தொடர்ச்சியாக பயணிக்கும் எண்ணத்திற்கு திருமாவளவன் வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
