என்.எல்.சி.யில் இதே வேலையா போச்சு! அதிகாரிகளை சும்மா விடக்கூடாது! வேல்முருகன் ஆதங்கம்!
சென்னை: என்.எல்.சி.யில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டதாகவும் கடந்த காலங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களில் இருந்து, என்.எல்.சி நிர்வாகம் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை எனவும் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அலட்சியமாக பணியாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது புதிதாக ஒரு தீ விபத்து ஏற்பட்டிருக்கது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது;

நெய்வேலி அனல்மின் நிலையம்
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்தில், 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.கடந்த காலங்களில் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து, என்.எல்.சி நிர்வாகம் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, இப்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து பறைசாற்றுகிறது.

தீ விபத்து
கடந்த காலங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பாடம் கற்று, விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்தை தவிர்த்திருக்கலாம். தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.என்.எல்.சி நிர்வாகம், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், உயர் தொழில்நுட்ப வசதியில்லாத நிறுவனத்திற்கும், பராமரிப்பு மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்குவதால், இப்படியான தீ விபத்து தொடர்கதையாகி வருகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
எனவே, எதிர்வரும் காலங்களில், இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதலை என்.எல்.சி நிர்வாகம் உருவாக்க வேண்டும்.
மேலும், விபத்தில் காயமடைந்த 5 தொழிலாளர்களுக்கு, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு போதுமான இழப்பீடும், மீண்டும் பணியில் சேர முடியாதவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்று வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி
விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய, தொழிற்சங்க நிர்வாகிகள் அடங்கிய, உயர்மட்ட விசாரணை குழு அமைத்து, விபத்துக்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, என்.எல்.சி நிர்வாகம் முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications