தமிழகத்தில் பல லட்சம் கோடி வரி சுரண்டல்! பீகாருக்கு அள்ளிக் கொடுத்த பட்ஜெட்! வேல்முருகன் கண்டனம்
சென்னை: வரி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுரண்டிய மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு திட்டம் எதுவும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுரண்டி செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது கண்டனத்துக்குரியது!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், சுமார் 26 கோடி விவசாயத் தொழிலாளர்கள் உள்ள நிலையில், அத்திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் இன்றி ஒன்றிய அரசு கடந்து சென்றுள்ளது.
அதவாது, 2024-2025ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு, ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், ஊதியமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 2025-2026ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அதுகுறித்த எவ்வித அறிவிப்பும் இல்லை என்பது 26 கோடி விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதன் மூலம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டவே ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டால், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும் என்ற பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையை, நிதிநிலை அறிக்கையில் கருத்தில் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
உயர்நீதிமன்றங்களில் 61 லட்சம் வழக்குகளும், விசாரணை நீதிமன்றங்களில் 4.62 கோடி வழக்குகளும் நிலுவையில் இருக்கும் நிலையில், உயர்நீதிமன்றங்களில் 1,114 நீதிபதி பணியிடங்களில் 332 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.
இந்திய ஒன்றியத்திற்கு காலநிலை மாற்றம் பெரும் சவாலாக விளங்கி வரும் நிலையில், அச்சவாலை எதிர்க்கொள்வதற்கோ, சுற்றுச்சூழலின் பாதுகாப்பு கருதி, நாசக்கார திட்டங்களை ஒழித்துக் கட்டுவதற்கோ எந்த அறிவிப்பும் இல்லை.
ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி, காப்பீட்டு துறையில் நூறு சதவீதம் அந்நிய முதலீடு செய்ய அனுமதிப்பது சாதாரண மக்கள் சேமிப்பை பாதிக்கும்.
குறிப்பாக, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை வழி ரயில்பாதை திட்டம், ரயில் பாதை மின் மயமாக்கல் போன்ற தமிழ்நாட்டின் திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் கால நிவாரணம் மற்றும் மறு வாழ்வு, புனரமைப்பு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
தமிழ்நாட்டில் வரி என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளை கொள்ளை அடித்துச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது கண்டனக்குரியது.
அதானி, அம்பானி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு வழக்கம் போல் ஆதரவுக் கரம் நீட்டியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாதது ஓரவஞ்சனையே!
முக்கியமாக, பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்று கூறுவதை விட, பீகார் மாநிலத்திற்காக ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையே எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். இவ்வாறு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications