தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேல்முருகன் வைக்கும் வேண்டுகோள்! இந்த மூன்றும் நமக்கு முக்கியம்!
சென்னை: பொங்கல் திருநாள் கொண்டாடும் இந்நல்வேளையில் தமிழ்நாடு இளையோர் ஒவ்வொருவரும் இன உரிமை அரசியல், சமூக சமத்துவம், உளவியல் அறம் ஆகிய மூன்றையும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும் என வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தமிழின வீரத்தை மழுங்கடித்து, சாதி, மத அடாவடித்தனத்தைத் தூண்டி விட்டு, நம்மை அடிமையாக்க பார்க்கிறார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழர் திருநாள்
பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழறிஞர்களாலும், அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும், தமிழர் திருநாள் என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, உலகெங்கும் நிறைந்திருக்கும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறோம்.

உழவுத் தொழில்
உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கெல்லாம் உணவளித்துத் தாங்குவதால், உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள். அப்படிப்பட்ட உழவர்கள் தங்கள் உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் நாள் பொங்கல் திருநாள். இந்துவாக, இசுலாமியராக, கிறித்தவர் என்ற வேறுபாடின்றி, ஒரே இனம்; அது தமிழினம் என்ற அடிப்படையில், தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு இருக்கிறோம்.

இந்துத்துவா முகமூடி
இச்சூழலில், இந்துத்துவா முகமூடி மாட்டிக் கொண்டு வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்திய தேசியவாத கும்பல்கள், நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மறுபுறம், தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் அச்சக்திகள், தமிழ்நாடு என அழைக்க வேண்டாம்; தமிழகம் என்பதே சரி என வாதம் செய்து வருகிறது. இந்த இரு சொற்களுமே சரியானது தான்; அவை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு போனது தான்; ஆனால், தமிழ்நாடு என்பது அவர்களை ஏதோ வகையில் அச்சுறுத்துகிறது என்றால், நாம் தமிழ்நாடு என்றே அழைப்போம்.

தமிழின வீரத்தை மழுங்கடித்து
இந்தத் தன்னலக்காரர்கள் தமிழின வீரத்தை மழுங்கடித்து, சாதி, மத அடாவடித்தனத்தைத் தூண்டி விடுகிறார்கள். தமிழ்ப்பற்றை மறக்கச் செய்து, ஒரே நாடு என்ற இந்திய தேசியத்துக்குள் அடைத்து, நம்மை அடிமையாக்க பார்க்கிறார்கள். இதற்கெல்லாம், அறிவார்ந்த தமிழினத்தில் பிறந்த இளையோர்கள் சாய்ந்து விடக்கூடாது.

பொன்னான எதிர்காலம்
ஆரியர் எதிர்ப்பு சங்க காலத்திலிருந்து தமிழ் இனத்தில் இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், திருவள்ளுவர், திருமூலம், வள்ளலார் வழியில் நின்று, பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய அரிய பொன் மொழியாகும். அதன்படி, தை வந்தால் நமக்கு ஒரு பொன்னான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு செயலாற்றுவோம்.

மூன்றும் முக்கியம்
தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் இந்நேரத்தில், நம் இளையோர் ஒவ்வொருவரும் இன உரிமை அரசியல், சமூக சமத்துவம், உளவியல் அறம் மூன்றையும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும். அதே நேரத்தில், தமிழர்களின் வாழ்வுரிமை காக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் அரணாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மீண்டுமொருமுறை மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications