திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன்
சென்னை: சமூக நீதிக்கு எதிரான சக்திகளை உடன் வைத்துக்கொண்டு, எப்படி திமுகவால் சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? என தவாக தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் அமைச்சரவையும் முதல்வரும் இந்த நாட்டை ஆள வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேர்தலுக்கு தேர்தல் மக்களை சந்தித்து வாக்கு கேட்கிற போது, அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டங்களை தீட்ட முடியும். சட்டங்களையும் இயற்ற முடியும்.

ஆனால் திமுக அரசை பொறுத்தமட்டில், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணக் கூடிய அதிகாரிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சட்டசபையில் ஆட்சி மாறியிருக்கிறது, ஆனால் காட்சி மாறவில்லை என நான் குற்றம்சாட்டியிருந்திருக்கிறேன்.
சில அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி நான் பேசியிருக்கிறேன். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்ட அதிகாரிகள் வேல்முருகன் இந்த கூட்டணியில் தொடர்ந்து கூடுதல் இடங்களோடு மீண்டும் தமிழக சட்டசபைக்குள் வந்தால் அவர்கள் செய்திருக்கிற லஞ்ச லாவண்ய ஊழல், தமிழர் விரோத நடவடிக்கை, பாசிச சங்பரிவார்களுக்கு ஆதரவாக திமுக தலைமையிலான அரசிலே இருந்து கொண்டு கோலோச்சுவதை எல்லாம் இன்னும் வெட்ட வெளிச்சமாக தோலுரித்து காட்டுவார் என்ற அச்சத்தின் காரணமாகவும் என்னை திட்டமிட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கு தமிழர் அல்லாத, தமிழர் விரோத தமிழின உரிமைக்கு எதிராக , தமிழீழ விடுதலைக்கு எதிராக , சமூக நீதி லட்சியத்திற்கும் கொள்கைக்கும் எதிராக, இருக்கும் அதிகாரிகளின் பேச்சையும் அவர்களது அறிவுரைகளையும் கேட்டுக் கொண்டு திமுக தலைமை தமிழக வாழ்வுரிமைக் கட்சியை புறக்கணித்துவிட்டது.
சமூகநீதி இயக்கமான திமுக, ஏன் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது? வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதற்கான தரவுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று உத்தரவிட்ட பிறகு, அதை நான் பல முறை தமிழக சட்டசபையில் சுட்டிக் காட்டி பேசிய போது முதல்வர், அதற்கான ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து அந்த விவரங்களை சேகரித்து நடைமுறைப்படுத்துவதற்கு நான் ஆலோசனை செய்கிறேன் என சொன்ன முதல்வரை தடுத்தது சமூகநீதிக்கு எதிரான சக்திகள்தான். இவர்களை வைத்துக் கொண்டு எப்படி திமுக சமூகநீதி அரசாக நடை போட முடியும்?
தமிழ் சமூகத்திற்காக உழைத்து போராடிக் கொண்டிருக்கிற எண்ணற்ற தமிழ்ச் சமூகத்தின் ஆளுமைகளுக்காக மணிமண்டபம், சிலைகள், நினைவுத்தூண்கள், தபால் தலைகள், தெருக்களின் பெயர்களை சூட்டுங்கள் என நான் சொன்ன போதெல்லாம் எந்த பதிலும் சொல்லாமல் பெயரளவுக்கு சில விஷயங்களை செய்துவிட்டு ஒரு சினிமா நடிகர் கேட்டார் என்பதற்காக அவருடைய தந்தையின் பெயரில் தெருக்களுக்கு பெயர் வைப்பது என்ன நியாயம்? என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications