வேலுமணி மீதான வழக்கு.. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் ஐஏஏஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசு
சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் விடப்பட்ட டெண்டரில் சுமார் ரூ.98 கோடி ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான இந்த டெண்டர் முறைகேடு வழக்கில், 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் விடப்பட்ட டெண்டரில் சுமார் ரூ.98 கோடி ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தது. இதன்படி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை, கோவை மாநகராட்சிகளின் உயர் அதிகாரிகள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் குற்றச்சாட்டுக்கு ஆளான 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் வழக்கை நடத்த மத்திய அரசிடம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அனுமதியை பெற ஏன் காலதாமதம் ஆனது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இதுபற்றி கூறும் போது, இந்த அனுமதியைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள 19 மாத காலதாமதத்தைக் கடுமையாகச் சாடினார். "ஊழல் வழக்குகளில் இத்தகைய தாமதங்கள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், விஜிலன்ஸ் கமிஷனர் மணிவாசன், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ''ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் கோரி அனுப்பிய கடிதம், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. நினைவூட்டல் கடிதங்களும் அனுப்பப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் யாரையும் அரசு பாதுகாக்கவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications