திருச்சி கிழக்கில் வெற்றி ஈஸி இல்லை.. விஜய்க்கு காத்திருக்கும் சவால்! கையைப் பிசையும் TVK கட்சியினர்
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், இரண்டாவது முறையாக அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிரச்சாரம் ரத்தானது. விஜய்க்கு ஆதரவாக தவெக கட்சியினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். விஜய் இங்கு வெற்றி பெற கடும் சவாலாக இருப்பதால் தவெகவினர் கையைப் பிசைந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய்
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதியில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். ஆனால் விஜய் தீவிரமாக எதிர்க்கும் திமுகவுக்கு சென்னை பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. இந்த 2 தொகுதிகளிலும் சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தவரின் வாக்குகள் தனக்கு கை கொடுக்கும் என்று விஜய் கருதுவதாகத் தெரிகிறது.
கிறிஸ்தவ மக்களையும், தனது ரசிகர்களையும் நம்பி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் அங்கு வெற்றி பெறுவது எளிதான விஷயம் இல்லை என்பதே கள நிலவரமாக இருக்கிறது. உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்து, கிறிஸ்தவர் என்ற அடையாளம் மட்டும் விஜய்க்கு கை கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருச்சி கிழக்கு
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்தார். பின்னர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விஜய் பிரச்சாரம் திருச்சி கிழக்கில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது முறையாக திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏப்ரல் 14 ஆம் தேதியான நேற்று பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் மொராய்ஸ் சிட்டி பகுதிக்கு சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ செல்லவும் திட்டமிருந்தார்.
விஜய் பிரச்சாரம் ரத்து
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறு திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்சியின் சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று மாநகரக் காவல்துறை 27 கட்டுப்பாடுகளுடன் விஜய் நிகழ்வுக்கு அனுமதியளித்தது. இந்த நிலையில், திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த விஜய் பிரசார நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நேற்று திருப்பூரில் பிரச்சாரம் செய்தார் விஜய்.
தொடா்ந்து பல இடங்களில் விஜய் பிரசார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், திருச்சியிலும் ரத்து செய்யப்பட்டிருப்பது அங்குள்ள நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், கண்டிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் ஒரு முறை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார் என கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையும் தேதி குறித்து ஆலோசித்து வருகிறது என்றார்.
தவெகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
இதையடுத்து தவெக நிர்வாகிகளும், தொண்டா்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து, கிழக்கு தொகுதிக்கு உபட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாயக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆா்.கே. ராஜா தலைமையில், தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் ஒரு குழுவாக, சின்னக் கடை வீதி, ஆண்டாா் வீதி, ஜான் தோப்பு, கீழரண் சாலை, மேலரண்சாலை, சிங்காரத் தோப்பு, சந்துகடை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, தவெக தலைவா் விஜய் வெற்றி பெற விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
கையைப் பிசையும் தவெகவினர்
பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய், ஒருவேளை இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அதில் ஏதேனும் ஒன்றில் ராஜினாமா செய்ய வேண்டும். சென்னையில் இருப்பது தான் வசதி என்று பெரம்பூரை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இச்சூழலில் தான் விஜய்யும் பிரச்சாரம் செய்ய வராமல் இருப்பதால் திருச்சி தவெகவினர் கையைப் பிசைந்து வருகின்றனர்.
தற்போதைய சில கருத்துக்கணிப்புகள், திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி எளிதல்ல எனத் தெரிவிக்கின்றன. திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கை ஓங்கி இருப்பதாகச் சொல்கின்றன. இப்படியான சூழலில், விஜய் பிரச்சாரம் செய்தால் தங்களுக்கான மைலேஜ் ஏறும் என எதிர்பார்க்கின்றனர் திருச்சி தவெகவினர்.












Click it and Unblock the Notifications