எல்லாம் 15 வயசு கூட இருக்காதுங்க..பேச்ச பாருங்க.. டிடிஎப் வாசன் தான் இதுக்கு முதல் காரணம்
சென்னை: பைக் வீலிங் செய்த போது, விபத்தில் சிக்கி கைதான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை பல்வேறு இளம் சிறார்கள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.
டிடிஎப் வாசன் வீலிங் செய்து விழுந்து, உயிர் தப்பிய நிலையில், கைதாகி சிறையில் உள்ளார். இவரை பின்பற்றும் ஏராளமான இளைஞர்கள், இவரை போலவே வீலிங், அசுர வேகத்தில் வாகனத்தில் போவது, பைக்கில் சாகசம் செய்வது போன்ற செயல்களை செய்கிறார்கள்.

எல்லாம் 15 வயசு கூட இருக்காதுங்க..பேச்ச பாரேன்..வீட்ல எப்படிதான் இவனுங்கள சமாளிப்பாங்க... என்று வேதனையை சமூக ஆர்வலர் ஒருவர் வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிடிஎப் வாசனை பார்க்க சிறார்கள் எந்த அளவிற்கு போராடினார்கள் என்பதும், எப்படி சிறார்கள் டிடிஎப் வாசனை கொண்டாடுகிறார்கள் என்பதும் அதில் இருக்கிறது.
இதனால் மூத்த பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் டிடிஎப் வாசனின் செயலை கடுமையாக கண்டித்துள்ளனர்.
மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்வெளியிட்டிருந்த பதிவில், இவங்கதான் வருங்கால தமிழ்நாடா விளங்கிடும். சினிமாக்காரங்களை ஹீரோ வொர்ஷிப் செஞ்சு வீணா போய்கிட்டு இருந்த இளசுகள் இன்று யூடியூபர்கள் பின்னால் போறாங்க. பைக் மீது பசங்களுக்கு இருக்கற ஆர்வத்தை தூண்டி ஸ்டண்ட் செஞ்சு அடுத்த தலைமுறையை சீரழிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "உண்மையில் இந்த 2K கிட்ஸ்ஸோட நெருக்கமாக இருப்பதால் சொல்கிறேன்.மோசமான முன்னுதாரணங்களை என்ஜாய் செய்கிறார்கள்.இதுல வேற எதுக்கெடுத்தாலும் கூஸ்பம்பு.
நீச்சல் தெரியுமாடான்ன தெரியாது. தாத்தாவொட அப்பா பெயர் என்ன தெரியாது. பக்கத்து வீட்டு அண்ணன் பெயர் தெரியாது.
உயிர்மெய் எழுத்து எத்தனை தெரியாது...ஆனா அந்த ஸ்மார்ட் போனை நோண்டி,நோண்டி டிடிஎப் வாசன் போன்ற இத்துபோன பசங்கள நல்லா தெரிஞ்சு வச்சிருக்கானுக.இதை நாம சொன்ன நம்மள பூமர் அங்கிள்கிரானுக" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இன்னொரு ஆசிரியர் வெளியிட்டுள்ள பதிவில், "பெற்றோர்கள் எது நல்லது எது கெட்டது என கூறி வளர்க்க வேண்டும் குழந்தைகளிடம் பேசுவதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் நல்லது கெட்டது எது என்பதை கூற வேண்டும் மொபைல் போன் பயன்படுத்துவதை ஊக்குவிக்காமல் அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
இன்னொரு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், குறைந்தபட்சம் டிடிஎப் வாசன் தெரியாமல் செய்துவிட்டார்... முதல்முறையாக செய்துவிட்டார் என்றாலாவது பரவாயில்லை... ஆனால் பல முறை செய்து, பலரும் கண்டித்த பிறகும்... பிறரை கொல்லும் நோக்கில் இப்படிப்பட்ட செயலில் மீண்டும் ஈடுபடுவது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே டிடிஎஃப் வாசனை பாலுசெட்டிசத்திரம் போலீசார், பைக் வீலிங் செய்தது தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரத்தில் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications