விஜய் கேட்டது.. இதைவிட சின்ன, குறுகிய இடம்.. தவெக செய்த பெரிய தவறு.. உண்மையை போட்டு உடைத்த டிஜிபி
சென்னை: கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இரண்டு இடமுமே குறுகிய இடம் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விளக்கம் அளித்து உள்ளார்.
கரூரில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக கூட்டம் மிகப்பெரிய அசம்பாவிதமாக மாறி உள்ளது. மிகப்பெரிய துயரம் அங்கே அரங்கேறி உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 40 பேர் வரை பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 40 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 10 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு DGP விளக்கம்
கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இரண்டு இடமுமே குறுகிய இடம் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விளக்கம் அளித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.
கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடம் லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிதான் இந்த இரண்டு இடமுமே குறுகிய இடம். ஏற்கெனவே தவெக சார்பில் நடந்த பரப்புரையில் கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த இடம் போதாது என்று கூறினோம். அதற்கேற்ப தற்போதைய இடமான வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது.
தவெக விஜய் செய்த தவறு
தற்போதைய இடத்தில்தான் இரண்டு நாட்களுக்கு முன் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்புரை செய்திருக்கிறது 10,000 பேர் வருவார்கள் என சொன்னார்கள். ஆனால் 10,000-ஐ விட அதிகமாக எதிர்பார்த்துதான் காவல்துறையினர் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் 27,000 பேர் வரை வந்தார்கள்.
ஆனால் மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டிவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. முடிவில் காரணம் தெரிய வரும் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தெரிவித்து உள்ளார்.
போலீஸ் வட்டாரம் தகவல்
இது தொடர்பாக போலீசார் வட்டாரங்கள் வெளியிட்ட தகவலில், விஜய் தாமதமாக வந்ததே இந்த பெருந்துயருக்கு முக்கியமான காரணம். விஜய் மாலை வந்திருக்க வேண்டும். அதாவது 3-4 மணி அளவிலேயே வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் 3 மணி நேரம் தாமதமாக வந்தார். இதுதான் பிரச்சனை.
நேரம் தாமதமாக ஆன காரணத்தால்.. விஜய் வருவதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினார்கள். நேரம் ஆக ஆக விஜய் வரப்போகிறார் என்ற தகவல் பரவி மக்கள் அதிகமாக வந்தனர். இதுவும் மரணங்களுக்கு முக்கியமான காரணம் என்று போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications