சிரஞ்சீவியா? பவன் கல்யாணா? விஜய்க்கு ரெண்டே ஆப்ஷன்தான்! சாய்ஸ் கொடுத்த தமிழருவி மணியன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சிரஞ்சீவியாக இருப்பதா இல்லை பவன் கல்யாணாக இருப்பதா என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே விஜய்யிடம் உள்ளது. அதில் எதை தேர்வு செய்ய போகிறார் என தமாகாவில் இணைந்த தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். சிரஞ்சீவி அரசியல் கட்சியை தொடங்கி கட்சியே காணாமல் போய்விட்டது. ஆனால் அவரது தம்பி பவன் கல்யாணோ பாஜகவுடன் கூட்டணி அமைத்து தற்போது ஆந்திரா துணை முதல்வராக இருந்து வருகிறார் என்பதைத்தான் தமிழருவி மணியன் குறிப்பிடுகிறார்.
காந்தி மக்கள் இயக்கம் என்ற கட்சியை கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கினார் தமிழருவி மணியன். பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த கட்சிக்கு காமராஜர் மக்கள் கட்சி என பெயர் மாற்றினார்.

இந்த நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு நிர்வாகிகளுடன் கூண்டாக போய் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியன் இணைத்துவிட்டார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று இந்த இணைப்பு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு பிறகு தமிழருவி மணியன் பேசுகையில், "ஒரு முறை ரஜினிகாந்த் என்னை அழைத்து மாற்று அரசியல் செய்யலாம் வாங்க என அழைத்தார். அதன் பேரில் சென்றேன். ஆனால் திடீரென அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியல் கட்சியை தொடங்கவில்லை.
அவருடன் மாற்று அரசியல் குறித்து 3 ஆண்டுகளாக பேசியதில் 3 கோப்பை மிளகு ரசம் கிடைத்ததுதான் மிச்சம். தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு லட்சியக் கூட்டம். அது ஒரு பஞ்சவர்ண கிளி போன்றது. விஜய் சிரஞ்சீவியாக இருப்பதா அல்லது பவன் கல்யாணாக இருப்பதா என்ற இரு ஆப்ஷன்கள்தான் அவர் முன் இருக்கிறது.
1967 ஆம் ஆண்டு அண்ணாவும் ராஜாஜியும் கூட்டணி அமைத்தது சாத்தியம் என்றால் அதிமுக, பாஜக, விஜய் ஒரே அணியில் நிற்பதும் சாத்தியமே. எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அரசியல் எதிரியை வீழ்த்தத்தான் விஜய் பாடுபட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கொள்கை எதிரியை பார்த்துக் கொள்ளலாம்.
விஜய் தனி அணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. அதை அவர் சிந்திக்க வேண்டும். உண்மையிலேயே விஜய்க்கு கணிசமாக வாக்கு வங்கி இருக்கிறது. அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும். தமிழக நலனுக்காக முதல்வர் பதவியை அவர் தியாகம் செய்ய வேண்டும்.
ரஜினியிடம் நான் ரூ 200 கோடி பணம் பெற்றதாக சிலர் கூறுகிறார்கள். கட்சி தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு பணம் வாங்கிவிட்டதால் அவர் கட்சியை தொடங்கவில்லை என்றெல்லாம் பேசினர். ஆனால் நான் பணம் வாங்க வில்லை. அவரை சந்தித்த போதெல்லாம் மிளகு ரசம் அருந்தினேன். எனவே 3 முறை சந்தித்ததில் 3 கோப்பை மிளகு ரசம்தான் பாக்கி! ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர பெரும் முயற்சியை செய்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் சரத்குமார் இணைத்தார். அது போல் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசனின் தமாகாவில் இணைத்தார் தமிழருவி மணியன்.












Click it and Unblock the Notifications