சர்ச்சுக்குள் கட்சி துண்டு அணிந்து சென்ற விஜய்! நடத்தை விதி மீறல் வழக்கு பாய்கிறது.. என்ன தண்டனை?
சென்னை: கோயில், தேவாலயங்கள், மசூதி என மத வழிபாட்டு இடங்களுக்குள், கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு கேட்கக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. ஆனால், தவெக தலைவர் விஜய் இதை மீறி இருக்கிறார். எனவே, அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார்கள் எழுந்திருக்கின்றன.
நேற்று திருச்சியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த விஜய், திடீரென தேவாலயத்திற்குள் சென்று மண்டியிட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்திருந்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. இந்நிலையில், நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் தேர்தல் பிரச்சாரத்திற்கான மேடையாகப் பயன்படுத்தக்கூடாது. வாக்கு சேகரிப்பது, கட்சி சின்னங்களைக் காட்சிப்படுத்துவது, போஸ்டர் ஒட்டுவது அல்லது அங்கு அரசியல் கூட்டங்கள் நடத்துவது ஆகியவை விதிகளுக்கு எதிரானது.
இதில்தான் விஜய் சிக்கியிருக்கிறார். விஜய் மண்டியிட்டு நடந்தபோது கட்சி துண்டை தோளில் அணிந்திருந்தார். கட்சி சின்னங்களைக் காட்சிப்படுத்துவது நடத்தை விதிமீறல். இப்படி விதிகளை மீறுவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டது.
வழிபாட்டுத் தலங்களில் அரசியல் செய்வது ஊழல் நடைமுறை எனக் கருதப்படும். இதற்காக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
ஒருவேளை வெற்றி பெற்ற வேட்பாளர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.












Click it and Unblock the Notifications