"உங்க குடும்பத்தில் ஒருவன்.. மன்னிச்சிடுங்க”.. கரூரில் பலியானோர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், உங்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, வேதனையுடன் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் சந்திப்பை நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். கரூரில் நடந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சந்திக்க போகாத விஜய்
கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. அதற்காக அவர் முயன்றதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பலியானோரின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து, அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவெடுத்தார்.
மாமல்லபுரம் ரிசார்ட்
அதன்படி, கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் தவெக நிர்வாகிகள் ஏற்பாட்டில் நேற்று இரவு சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும், மாமல்லபுரம் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் ஒவ்வொரு குடும்பமாக தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை முதல் மாமல்லபுரம் ஹோட்டலில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை விஜய் இன்று தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உள்ளார். ஒவ்வொரு அறைக்கும் செல்லும் விஜய், அந்த அறையில் வைக்கப்பட்ட. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசி வருகிறார்.
உருக்கமாகப் பேசிய விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கைகளை தவெக தலைவர் விஜய் எழுத்துப்பூர்வமாக பெற்றுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கின்றனர். உயிர் இழந்தோர்களின் குடும்பத்தினரிடம் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக விஜய் அவர்களிடம் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், உங்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்போதும் தானும், சுட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது












Click it and Unblock the Notifications