குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய்
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் தினமும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்த பிறகு, தனிப்பெரும்பான்மையை நோக்கி அதிரடியாக அரசியல் காய்களை நகர்த்தி வருவது தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதனை அதிமுக - திமுக 'குதிரை பேரம்' என விமர்சிக்கிறது. ஆனால், 2009ஆம் ஆண்டு திமுகவின் கருணாநிதியும், 2011ல் அதிமுகவின் ஜெயலலிதா செய்ததைத் தான் தற்போது 2026ல் விஜய் செய்கிறார் என்கின்றனர் தவெகவினர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தனித்து ஆட்சியமைக்க தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட முடியவில்லை. இதனால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை விஜய் அமைத்தார்.

ஆனால், ஆரம்பம் முதலே "கூட்டணி தயவில் ஆட்சி" என்ற நிலை தவெக தலைமையை சற்றே நெருடலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுக்கலாம், அரசியல் நெருக்கடி உருவாகலாம் என்ற நிலையும் உள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
இதனால், தனிப்பெரும்பான்மையை நோக்கி நகர வேண்டும் என்ற முடிவுக்கு தவெக தலைமை வந்துள்ளது. இதற்காகவே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலை தவெக மிகவும் கூர்மையாக பயன்படுத்த தொடங்கியது என்கின்றனர். 2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவின், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக திரும்பினர். அதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தவெக தரப்பு
முதலில், இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நேரடியாக அமைச்சரவையில் சேர்க்கும் திட்டம் தவெக தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. யாருக்கு எந்த அமைச்சரவை பதவி வழங்குவது என்பது குறித்தும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதில் பெரிய சட்டச் சிக்கல் இருந்தது. கட்சித் தாவல் தடைச் சட்டம் பிரச்சனையாக மாறும் அபாயம் இருந்தது.
குதிரை பேர அரசியல்
மேலும், "குதிரை பேர அரசியல்" என்ற விமர்சனம் எழும் அபாயமும் இருந்தது. இதற்கு கூட்டணியில் இருந்த இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. "அதிமுக அதிருப்தியாளர்களை அமைச்சரவையில் சேர்ப்பது தவெகவின் ஊழல் எதிர்ப்பு முகமூடியை கிழித்துவிடும்" என்ற கருத்தும் கட்சிக்குள்ளேயே எழுந்தது.
விஜய் அரசியல் ஃபார்முலா
இதையடுத்து, தவெக தலைமை புதிய அரசியல் ஃபார்முலாவை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது, எம்.எல்.ஏ.க்கள் முதலில் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; பின்னர் தனிப்பட்ட முறையில் தவெகவில் இணையலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம், கட்சித் தாவல் சட்ட சிக்கல்களையும் தவிர்க்கலாம்; அதே நேரத்தில் காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை அடையலாம் என்ற கணக்கு போடப்பட்டதாக கூறப்படுகிறது.
தனிப்பெரும்பான்மை
அதன்படியே, மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க.வின் பலம் குறைந்துள்ள நிலையில், தவெக தனிப்பெரும்பான்மையை நோக்கி இன்னொரு படி முன்னேறியுள்ளது.
கலைஞர் கருணாநிதி
இந்த அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் புதியவை அல்ல என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. அப்போது மதிமுகவில் இருந்த கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தனர். பின்னர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றனர்.
ஜெயலலிதா
அதேபோல், 2011-ல் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால், பண்ருட்டி ராமச்சந்திரன், அருண் பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 8 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தங்கம் பதவியை ராஜினாமா செய்தனர். அதன் காரணமாக தேமுதிக தனது எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது. பின்னர் அவர்கள் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் அவர்கள் தேர்தலிலும் போட்டியிட்டனர். அதேபோன்ற அரசியல் சூழ்நிலையே தற்போது தமிழகத்தில் மீண்டும் உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.
தனிப்பெரும்பான்மை அரசு
குறிப்பாக, தவெக தலைமையின் இலக்கு வெறும் கூட்டணி ஆட்சி நடத்துவது அல்ல; முழுமையான தனிப்பெரும்பான்மை அரசை உருவாக்குவதே என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால், அடுத்த சில வாரங்களில் மேலும் எத்தனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்பது தான் தற்போதைக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications