கரூர் கேஸ்.. பெரிய பிரச்சாரம் இல்லை.. ஏகப்பட்ட குற்றவழக்கு.. ஆனாலும் வென்ற தவெக.. விஜய் சம்பவம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உறைந்து போகச் செய்துள்ளன. இதுவரை திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்த தமிழகத்தில், முதல்முறையாகக் களமிறங்கிய தமிழக வெற்றி கழகம் (தவெக) 111 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சிக் கட்டிலை நெருங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக 54 இடங்களிலும், அதிமுக 69 இடங்களிலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் வேளையில், விஜய்யின் இந்த வெற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு நடிகராக மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், ஒரு அரசியல் தலைவராக அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
எவ்விதமான வலுவான கொள்கைப் பிரகடனமோ அல்லது நீண்ட கால மக்கள் போராட்டங்களோ இன்றி, வெறும் 10 சாலைப் பேரணிகள் மற்றும் சில மக்கள் சந்திப்புகளுடன் விஜய் இந்த வெற்றியை எட்டியுள்ளது ஜனநாயகத்தின் முரண்பாடாகவே பார்க்கப்படுகிறது. தீவிர அரசியல் களப்பணி ஆற்றிய அனுபவம் வாய்ந்த தலைவர்களையே மக்கள் நிராகரித்திருக்கும் சூழலில், வெறும் முகம் மட்டுமே விஜய்யைத் தற்காத்து நின்றதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

விஜய்யின் இந்த வெற்றியின் பின்னணியில் இருக்கும் முக்கிய எதிர்மறையான விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள்: தேர்தல் ஆணைய தரவுகளின் அடிப்படையில் வெளியாகும் ADR அறிக்கைப்படி, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சுமார் 92 பேருக்கு மேல் கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 43 வேட்பாளர்கள் மீது கொலை, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை போன்ற மிகக் கடுமையான (Serious Criminal Cases) பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தூய்மையான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிய விஜய்யின் கட்சியில் இத்தனை கறைபடிந்த நபர்கள் இடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுகவை விட தவெகவில்தான் அதிக குற்றவாளிகள் உள்ளன.
மக்களிடம் இருந்து ஓட்டம் - கரூர் சம்பவம்: 2025-ல் கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதை விடுத்து, விஜய் அந்த இடத்தை விட்டு உடனடியாக ஓடிப்போனது அவர் மீதான மிகப்பெரிய விமர்சனமாக இப்போதும் நீடிக்கிறது. ஒரு தலைவராக இக்கட்டான நேரத்தில் மக்களைக் கைவிட்டது அவரது பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
குறைவான களப்பணி: தேர்தல் பரப்புரையின் போது விஜய் மிகக் குறைந்த அளவிலேயே மக்களைச் சந்தித்தார். வெறும் 10 சாலைப் பேரணிகளை மட்டுமே நம்பி அவர் தேர்தலை எதிர்கொண்டார். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை நேரில் கேட்டறியாமல், சமூக வலைதளப் பிம்பங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்வது நீண்ட காலத்திற்குப் பயன் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொள்கை குழப்பம்: புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறினாலும், தவெக-வின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை. கொள்கை ரீதியான தெளிவை விட, ரசிகர் மன்றங்களின் பலத்தையே அவர் அதிகம் நம்பியுள்ளார்.
மௌனம்: மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளான நீட் தேர்வு, காவிரி நீர் விவகாரம், திருப்பரங்குன்றம் வழக்கு அல்லது விலைவாசி உயர்வு போன்ற தருணங்களில் ஒரு அரசியல் தலைவராகக் குரல் கொடுக்காமல், தேர்தல் நேரத்தில் மட்டும் வெளிப்பட்டது அவரது சந்தர்ப்பவாத அரசியலையே பிரதிபலிக்கிறது.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி தவெக-விற்கு வாக்களித்திருந்தாலும், அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளும், விஜய்யின் கடந்த கால இயலாமைகளும் புதிய அரசின் மீது ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மாநிலத்தை ஆளத் தேவையான முதிர்ச்சியும், துணிச்சலும் இல்லாமல், பின்னணியில் இருக்கும் கறைபடிந்த சக்திகளுடன் விஜய் எப்படிச் செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வெற்றியின் பின்னால் இருக்கும் இந்த நெகட்டிவ் காரணிகளை விஜய் சீர் செய்யத் தவறினால், இது தமிழகத்திற்கு ஒரு பொற்காலமாக அமையுமா அல்லது ஒரு இருண்ட காலத்தின் ஆரம்பமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.












Click it and Unblock the Notifications