குவியும் மாஜிக்கள்.. ஆதிக்கம் செலுத்தும் மாப்பிள்ளைகள்! தடுமாறுகிறதா தவெக? விஜயின் அரசியல் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன் ஆகியோர் இணைந்து இருக்கின்றனர். மேலும் சில முன்னாள் எம்எல்ஏக்களும் கட்சியில் சேர்ந்திருக்கும் நிலையில் பிரபலங்கள் யாரும் இணையாதது கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மாற்று அரசியல் முழக்கத்தோடு வந்திருக்கும் விஜய் தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தை முடித்திருக்கும் அவர் அதற்கு பிறகு தீவிர அரசியலில் களம் இறங்கி இருக்கிறார்.

முன்னதாக வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்த நிலையில், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சந்தித்தது, கோயம்புத்தூர் பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் என கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து அதிமுக அதிமுக சற்றே மிரண்டு போனதும் உண்மைதான்.

Vijay TVK politics

இதற்கிடையே கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் விஜய் ஈடுபட்டு வருகிறார். இதுவரை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ப மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்றிருக்கிறது. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் நியமனம் நடந்து முடிந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, கட்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பிரபலங்களை இழுத்து வரும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது.

விஜய் கட்சி ஆரம்பித்தபோது தாடி பாலாஜி உள்ளிட்ட சில நடிகர்கள் கூடவே இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தற்போது வரை பதவி வழங்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா, அதிமுகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமார், பேச்சாளர் ராஜ்மோகன் ஆகியோர் கட்சியில் சேர்ந்தனர். சேர்ந்த உடனேயே அவர்களுக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன், அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏக்கள், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதில் ஆதவ் அர்ஜுனா பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் என்பதும், மரிய வில்சன் ஜேப்பியாரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவருமே நிதி அளவில் மிக பலம் பொருந்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சேர்ந்த புதிதிலேயே இவர்களுக்கு பதவியும் வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது. இதனால் மாப்பிள்ளை கட்சி என்ற விமர்சனம் தமிழக வெற்றி கழகத்தின் மேல் விழுந்திருக்கிறது.

அதேபோல கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் கட்சி முழுவதுமே வியூக வகுப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அது தமிழக வெற்றி கழகத்தில் தான் காரணம். ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி என ஏற்கனவே தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கட்சியில் இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் பிரசாந்த் கிஷோரும் விஜய்க்கு பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வந்து சேர்ந்திருக்கும் அருண்ராஜ் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தாலும், தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுத்துக் கொடுப்பார் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

இப்படியாக பிரபலங்கள் அல்லாத நபர்கள் கட்சியில் இருக்கின்றனர். பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் பிரபலங்களுக்கும் தெரிந்த முகங்களுக்கும் முன்னுரிமை கொடுப்பார்கள். அப்படி பார்க்கையில் விஜய் தவிர தெரிந்த பிரபலமான முகங்கள் தமிழக வெற்றி கழகத்தில் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பிரபலங்கள் இல்லை என்றாலும் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் கூட இருந்து பார்த்துக்கொண்டனர்.

ஆனால் அது போன்ற நபர்கள் யாரும் விஜய் உடன் இல்லை. அதனால் அறிக்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். அது தமிழக அரசியலுக்கு போதாது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் அடிப்படை கட்டமைப்பை விஜய் இன்னும் வலுப்படுத்தவில்லை. மாநகர், நகர், ஒன்றிய அளவிலான பதவிகள் நிரப்பப்படவில்லை. மாவட்ட செயலாளர்களே இந்த வாரம் தான் முழுமையாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அடுத்தடுத்து செல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. சினிமா சூட்டிங் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்து விட முடியாது. எனவே விஜயின் வியூகம் தேர்தலில் கை கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+