50 தொகுதிகள் குறி.. 30தான் டார்கெட்.. இதுல மட்டும் ஃபோகஸ் பண்ணுங்க.. விஜயின் புதிய தேர்தல் வியூகம்
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாகப் போட்டியிடுவதை விட, குறிப்பிட்ட 50 தொகுதிகளில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தி, அதில் கணிசமான இடங்களைப் பிடிக்க அக்கட்சி புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாகத் தெரிகிறது. மற்ற இடங்களில் போட்டியிட்டாலும் அங்கே விஜய் பெரிதாக பிரச்சாரம் செய்ய மாட்டார் என்கிறார்கள்.
தவெக எடுத்த சர்வேயின் கள நிலவரங்களின்படி, சென்னை முதல் விழுப்புரம் வரையிலான வட மாவட்டங்களில் தவெக கட்சிக்கு பலமான ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் விஜய்யின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்டல வாரியான ஆதரவு நிலை இருப்பினும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நிலைமை சவாலாகவே உள்ளது. தென் தமிழகத்தில் தற்போது வரை விஜய்யின் கட்சிக்கு எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், மத்திய தமிழக மாவட்டங்களிலும் அக்கட்சிக்கான ஆதரவு குறைவாகவே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, கட்சி தனது ஒட்டுமொத்த பலத்தையும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் காட்ட முடிவு செய்துள்ளது.
30 இடங்களே இலக்கு: அரசியலை மாற்றும் திட்டம்
தவெக தற்போது 50 தொகுதிகளைத் தேர்வு செய்து, அதில் தீவிரமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளது. இந்த 50 இடங்களில் குறைந்தது 25 முதல் 30 இடங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்பதே விஜய்யின் தற்போதைய இலக்கு.
தமிழக அரசியலில் ஒருவேளை தொங்கு சட்டமன்றம் போன்ற சூழல் உருவானால், இந்த 30 இடங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஆட்சியைத் தீர்மானிக்கும் 'கிங்மேக்கர்' இடத்தைப் பிடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்த வாக்கு வங்கி விஜய்யிடம் இருக்குமானால், அவர் ஒரு "வீட்டோ" (Veto Power) அதிகாரத்தைப் பெற்றவராக மாறுகிறார். அதாவது, அவர் நினைத்தால் ஒரு கூட்டணியின் வெற்றியைத் தடுக்கவும் முடியும், அல்லது யார் ஆட்சி அமைக்கலாம் என்று முடிவு எடுக்க முடியும். இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலால் அதிருப்தியில் இருக்கும் நடுத்தர மக்களின் வாக்குகளை விஜய் அறுவடை செய்து வருவது, தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) உருவாவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சொந்தப் பணத்தை செலவிட முடிவு?
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த, அந்த 30 தொகுதிகளிலும் விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக, தனது சொந்தப் பணத்தையே நேரடியாகச் செலவிட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் களத்தில் மற்ற பெரிய கட்சிகளின் பண பலத்தை ஈடுகட்டவும், எந்தவித சமரசமும் இன்றி வெற்றியை உறுதி செய்யவும் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலிருந்து விழுப்புரம் வரையிலான தனது செல்வாக்கை முதலீடாகக் கொண்டு, 2026-ல் ஒரு பலமான சக்தியாக உருவெடுக்க தவெக தயாராகி வருகிறது. இந்த "டார்கெட் 50" திட்டம் எந்தளவு கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications