”Sorry வேண்டாம்” ”நீதி வேண்டும்..” விஜய் பங்கேற்கும் போராட்டத்தில் பதாகைகளுடன் வந்த தவெக தொண்டர்கள்
சென்னை: அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணை என்ற பெயரில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்தும், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை தமிழகத்தில் நடந்த 21 லாக் அப் மரணங்களுக்கு எதிராகவும் விஜய் இன்று போராட்டம் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் காலையிலேயே தவெக தொண்டர்கள் போராட்ட இடத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் "சாரி வேண்டாம், நீதி வேண்டும்" என்ற பதாகைகளுடன் போராடி வருகிறார்கள்.
சிவகங்கை திருப்புவனத்தில் திருட்டு புகார் ஒன்றில் அஜித் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது, விசாரணையின் போது போலீசார் அடித்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் காவல்துறை விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து விஜய் போராட்டம் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு காலை முதலே தவெக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் அதிக அளவில் வர தொடங்கினர்.
ஆனால் முன்னதாக நேற்று காவல்துறையினர் தவெகவின் போராட்டத்துக்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தனர். அதில், ஒன்று தான் வெளி மாவட்ட தொண்டர்கள் யாரும் இந்த தவெக போராட்டத்தில் கலந்துகொள்ள கூடாது. சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக கூறியிருந்தது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து போராட்டத்துக்கு வர முயன்றவர்களை போலீசார் அங்கேயே கைது செய்தனர்.
குறிப்பாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் புறப்பட்ட வேலூர், காஞ்சிபுரம் தவெக தொண்டர்களை நிபந்தனைகளை மீறியதாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக போராட்டத்தில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டதால் சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் காலையிலேயே போராட்டம் நடைபெறும் சிவானந்தா சாலையில் குவிய தொடங்கினர்.
அப்போது அவர்கள், சிஎம் சார் எங்களுக்கு சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி உள்ளனர். இது தொடர்பான கேஸ் டேக்கும் இணையத்தில் பரவி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அஜித் குமார் மரணத்தின் போது சாரிம்மா என அஜித் குமாரின் தாயாரிடம் செல்போன் வாயிலாக பேசி வருத்தம் தெரிவித்தார். மேலும் அனைத்து உதவிகளையும் நாங்க செய்வோம் என்று கூறியிருந்தார்.
இதனை மையமாக வைத்தே எங்களுக்கு சாரி வேண்டாம், நீதி தான் வேண்டும் என்ற வாசகத்தை கையில் எடுத்துள்ளனர். இதேபோன்று இன்று நடக்கும் போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றும் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 18 பேர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினரை சென்னை பனையூருக்கு வரவழைத்து அவர்களிடம் விஜய் பேசினார்.
அப்போது 18 பேரது குடும்பத்தினரும் விஜய்யிடம் பேசியுள்ளனர். இதைக் கேட்டு விஜய் கண்கலங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இன்று லாக் அப் டெத்களை கண்டித்து விஜய் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக களத்தில் வந்து விஜய் போராட்டத்தில் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications