விஜய் திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: செய்தியாளர்கள் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்
சென்னை: விஜய், திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்து உள்ளிட்டோர் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் இன்று செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய் திமுக, அதிமுக பாஜகவை விமர்சித்து பேசினார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு பொதுவெளியில் விஜய் பேசியிருந்தார்.

சேலத்தில் விஜய் பேச்சு
அப்போது பேசிய விஜய், "நாங்கள் எந்த கட்சியையும் ஒழிக்கவோ அழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை.. மக்களுக்கு நல்லது செய்யவே வந்திருக்கிறோம். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் தான் இப்போது பணத்தை வாரி வழங்குகிறார்கள். இந்த பணத்தை எல்லாம் வாங்கிக்கொள்ளுங்கள்..
இது எல்லாம் உங்கள் பணம் தான். பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்கள்.. அரசியலில் எங்களுக்கு அனுபவம் இல்லை என்கிறார்கள். இங்கே இருக்கிற கட்சிகளுக்கு கொள்ளை அடிப்பதில் தவிர்த்து வேறு எதில் அனுபவம் இருக்கிறது. எனக்கு அனுபவம் இல்லை தான்.. கொள்ளை அடிப்பதில் எனக்கு அனுபவம் இல்லை.. நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். காமராஜர் போல.. எம்ஜிஆர் போல நல்லாட்சியை வழங்குவேன்" என பேசியிருந்தார்.
நயினார் நாகேந்திரன் விமர்சனம்
இதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது.. அனுபவமே இல்லாதவர்.. முதலில் அவரை வீட்டில் இருந்து வெளியில் வரச் சொல்லுங்கள். திரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும். குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும்.
ஒரு நல்ல தலைமைக்கு அழகு வெளியில் வந்து பேசுவது தான். பக்குவமாக பேச வேண்டும். விஜய்யின் தவெக ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார்கள். " என்று விமர்சித்து பதில் கூறியிருந்தார். திரிஷா பெயரை சொல்லி பேசிய நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். அநாகரீகமாக பேசியதாக அவருக்கு கண்டனங்கள் வலுத்தன.
ஒரு அரசியல் தலைவர் இப்படி அநாகரீகமாக பேசியிருக்க கூடாது என திமுக எம்பி தமிழச்சி பாண்டியன் பேசியிருந்தார், தவெகவின் செங்கோட்டையன் பாஜக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது என விமர்சித்து இருந்தார். இதேபோல் தவெக நாஞ்சில் சம்பத், நிர்மல் குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து பாஜகவை விமர்சனம் செய்திருந்தனர். இதேபோல் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவின் டிடிவி தினகரனும் விமர்சித்து இருந்தார்.
நயினார் நாகேந்திரனிடம் கேள்வி
டிடிவி கூறுகையில், "நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் இல்லை. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்" என்று கூறியிருந்தார். இப்படி திரிஷா பற்றிய கண்ணியக் குறைவாக பேசியதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "ஒருமுறை தான் பேச முடியும்" என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து காரில் கிளம்பி சென்றார்.












Click it and Unblock the Notifications