அப்பா நல்லாயிருக்காருங்க.. சீக்கிரம் பழைய கேப்டனாக திரும்பி வருவாரு.. நன்றி.. விஜய பிரபாகரன் வீடியோ
சென்னை: கேப்டன் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் அவரிடம் சொல்வதாக அவரது மகன் விஜயபிரபாகரன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
விஜயகாந்தின் 69ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை மக்களுக்கு உதவி நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது கேப்டனின் வழக்கம்.
வலது கை கொடுப்பதை இடது கைக்குக் கூட தெரியாத அளவிற்கு பொது வாழ்விலும் சரி திரைத்துறையிலும் சரி நிறைய உதவிகளை செய்துள்ளார் விஜயகாந்த்.

உடல்நலம் சரியில்லை
அரசியலுக்கு வந்துள்ள அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வருகிறது. இதற்காக அவ்வப்போது வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் தேமுதிகவில் வளர்ச்சி என்பதே இல்லாமல் இருக்கிறது. இதற்கு காரணம் கூட்டணி தேர்வும் விஜயகாந்தின் நேரடி செயல்பாடும் இல்லாதது என தொண்டர்கள் கருதுகிறார்கள்.

இருப்பை காட்ட
அந்த வகையில் தேமுதிக தங்களது இருப்பை காட்டிக் கொள்ள இந்த உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரும் கருதுகிறார்கள். ஏனெனில் இந்த தேர்தலை விட்டால் அடுத்து 2024 இல் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே விஜயகாந்த் எப்போது பொது வாழ்க்கையில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள், ரசிகர்கள், நலவிரும்பிகள் மட்டுமின்றி அரசியல் நண்பர்களிடமும் உள்ளது.

விஜயகாந்த்
இந்த நிலையில் இந்த பிறந்தநாளில் விஜயகாந்த் பொதுமக்களையும் தொண்டர்களையும் சந்திக்கவில்லை. இதனால் தொண்டர்கள் சற்று வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறியவும் அவர்கள் ஆவலாக இருந்தனர்.

விஜய பிரபாகரன்
இதையடுத்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டனின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் விஜய பிரபாகரன் கூறுகையில், அப்பாவின் 69ஆவது பிறந்தநாளையொட்டி நிறைய பேர் வாழ்த்தியுள்ளீர்கள். மெசேஜ் அனுப்பியும் போன் செய்தும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அப்பா நன்றாக இருக்கிறார்.

ஆசிர்வாதங்கள் வேண்டும்
உங்களுடைய வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் அவருக்கு வேண்டும். அவர் நிச்சயம் பழைய நிலைக்கு வருவார். மக்களை சந்திப்பார். கூடிய விரைவில் அப்பாவை அழைத்து கொண்டு வெளிநாட்டுக்கு செல்லவிருக்கிறோம். அதனால் அப்பா இந்த ஆண்டு பிறந்தநாளையொட்டி யாரையும் சந்திக்கவில்லை.
கேப்டன் விஜயகாந்த்
அடுத்த ஆண்டு கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததும் தொண்டர்களுடன் நம்ம கேப்டன் சந்திக்கும் வாய்ப்பை நிச்சயமாக உருவாக்குகிறோம். இந்த பிறந்தநாளிலிருந்து அனைத்து மாறும் என நம்புகிறேன். அவர் மீண்டும் நல்ல உடல்நலத்துடன் திரும்பி வருவார். நீங்கள் எல்லாம் கூறிய பிறந்தநாள் வாழ்த்துகளை நான் அவரிடம் சொல்கிறேன். ஹேப்பி பர்த்டே கேப்டன் என்றார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி ஏதும் இன்றி பல்லாண்டு வாழ நாமும் வாழ்த்துவோமாக!.












Click it and Unblock the Notifications