விஜய் மாநாட்டால் விழா கோலம் பூண்ட விக்கிரவாண்டி! ரூம் எல்லாம் ஃபுல்..வீடுகளில் தஞ்சமாகும் தொண்டர்கள்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் மட்டுமன்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் விக்கிரவாண்டி நோக்கி பயணித்து வருகின்றனர். இதனால் விக்கிரவாண்டியில் ஹோட்டல் அறைகள் முழுவதும் நிரம்பி வழிவதால், வீடுகளில் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர் தொண்டர்கள்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் அறிவுறுத்தல் படி மேற்கொண்டு வந்தார்.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. என்பது ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மேடை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்க்கிங்குக்காக மட்டுமே 75 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
நாளை மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் 100 அடி கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார். அதனை தொடர்ந்து தொண்டர்களிடையே விஜய் உரையாற்றுவதோடு கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விஜய்யின் ஆதரவாளர்களும் ரசிகர்களும் தொண்டர்களும் விக்கிரவாண்டி நோக்கி பயணித்து வருகின்றனர். மாநாட்டு பணிகள் தொடங்கியதில் இருந்தே விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான ஹோட்டல் அறைகள் நிரம்பி விட்டதாகவே கூறப்படுகிறது.
கட்சியில் பொதுச் செயலாளர் ஆனந்த் மட்டுமல்லாது கோவை, திண்டுக்கல், திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்ட தலைவர்களும் செயலாளர்களும் நிர்வாகிகளும் விக்கிரவாண்டியிலேயே தங்கி இருக்கின்றனர். இதனால் ஹோட்டல் அறைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து திருமண மண்டபங்கள் வீடுகள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு எடுத்து தொண்டர்கள் தங்கி இருக்கின்றனர்.
வழக்கமாக பிற கட்சி மாநாடுகள் நடக்கும் போது பேருந்து உள்ளிட்டவற்றில் காலையில் கிளம்பி மாலைக்குள் மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி விடுவார்கள். ஆனால் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். இதனால் உணவகங்கள் சாலையோர கடைகள் உள்ளிட்டவற்றில் கூட கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே விஜய்யின் தமிழக வெற்றி கழக கொடி கட்டிய வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்டவற்றை மதுக்கடைகளை அருகில் கூட நிறுத்தக் கூடாது என தலைமை உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய விஜய் இன்று எக்ஸ் மூலம் ஒரு செய்தியை சொல்லி இருந்தார். அதில்,"பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்." என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications