கோவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்.. ஊர்வலம் கூடாது - ஹைகோர்ட்
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஆட்சேபமில்லை என ஜமாத் அமைப்புடன் இணைந்து உத்தரவாதம் அளிக்கும்பட்சத்தில் விழாவுக்கு பாதுகாப்பு வழங்க கோவை பெரியகடை வீதி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ஆம் தேதி மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கோவை உக்கடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட அனுமதி கோரி பெரியகடை வீதி போலீசாரிடம் உக்கடம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் விண்ணப்பித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் அப்பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதை எதிர்த்து மகாலட்சுமி தாக்கல் செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விழாவில் பங்கேற்க இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஆட்சேபமில்லை என ஜமாத் அமைப்பினரின் உத்தரவாதத்துடன், அரசு விதிமுறைகளை பின்பற்றி விநாயாகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தப்படும் என உறுதியளித்து விண்ணப்பிக்கும்பட்சத்தில் விழாவுக்கு பெரிய கடை வீதி போலீசார், பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்திற்குள் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடலாம் எனவும், எந்த ஊர்வலம் நடத்தக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications