வங்கதேசத்தில் இருந்து.. முதல் கட்டமாக 49 தமிழக மாணவர்கள் சென்னை வருகை.. தமிழக அரசு ஏற்பாடு
சென்னை: வங்க தேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 49 பேர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். முதற்கட்டமாக வங்க தேசத்தில் இருந்து 49 மாணவர்கள் சென்னை திரும்பியுள்ளனர் என்றும், வங்க தேசத்தில் இருந்து மாணவர்கள் அவரவர் வீடு செல்லும் வரை அவர்களின் செலவை அரசே செய்து வருகிறது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி இந்த இட ஒதுக்கீட்டிற்கு அந்நாட்டு ஐகோர்ட் அனுமதி அளித்த நிலையில், போராட்டங்கள் ஆரம்பித்தன. இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்தன. இதில் சுமார் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களைக் கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வங்க தேசத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. இதற்கிடையே தான் அங்கே படித்துக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களை மீட்க அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி தற்போது, இரண்டு விமானங்கள் மூலம் 20 மாணவர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேலும் 29 மாணவர்கள் சென்னை திரும்பினர். முன்னதாக இது தொடர்பாக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:- வங்கதேசத்தில் தற்போது நடைபெறுகின்ற பதற்றமான சூழலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்வதற்காக வங்கதேசம் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டும் என்பதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த முயற்சிகளின் காரணமாக முதற்கட்டமாக இரண்டு விமானங்களில் 20 மாணவர்கள் வங்கதேசத்தில் இருந்து சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மேலும் 29 மாணவர்கள் சென்னை வர இருக்கின்றனர். இன்று மட்டும் மொத்தம் 49 மாணவர்கள் தமிழகம் திரும்ப நம்முடைய துறை சார்பில், முதல்வரின் கட்டளையின் படி வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த 49 பேரும் முதற்கட்டமாக அவரவர் இல்லம் வரையில் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கின்ற பணியை செய்து வருகிறோம். நாளையும் 77 மாணவர்கள் வர இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. விமான கட்டணம் உள்பட அவர்களை இல்லம் வரை கொண்டு போய் சேர்க்கின்றது வரை நம் துறையே செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார் .












Click it and Unblock the Notifications