பாக்யராஜையே நீக்கிய விஷால்! நடிகர் சங்கத்தில் புகைச்சல்? கொதித்து எழுந்த உதயா
சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகர் சங தேர்தலை நடத்தாமல் விஷால் முடக்கி வைத்திருப்பது சங்க விதிமுறைக்கு எதிரானது என்று விஷால் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகள் அரசியல் கட்சியின் தேர்தலுக்கு இணையாக நடிகர் சங்கம் தேர்தல் நடந்தது. அப்போது பொறுப்பிலிருந்த ராதாரவி, சரத்குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார் விஷால். அது அப்படியே புகைய ஆரம்பித்தது. சரத்குமார் அணி தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறுத்தனர். ஆனாலும் விஷால் தனக்கு ஆதரவாக 'பாண்டவர் அணி’ என்ற ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டிப்போட்டு வெற்றி பெற்றார். அந்த அணியில் விஷாலுடன் துணையாக இருந்தவர்களில் நடிகர் உதயாவும் ஒருவர். இவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன். இயக்குநர் ஏ.எல். விஜய்யின் அண்ணன். ஆனால், பதவிக்கு வந்த சில காலத்தில் விஷாலுக்கும் உதயாவுக்கும் கருத்து வேறுபாடு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உதயா சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாகச் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உதயா பல குற்றச்சாட்டுகளைக் கிளப்பி இருக்கிறார். அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “பாரம்பரியம் மிக்கது நடிகர் சங்கம். அதில் ஒரு உறுப்பினராக இருந்தது எனக்குப் பெருமைதான். சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் பொறுப்பிலிருந்த காலத்தில் 'பாண்டவர் அணி’ என்று ஒரு புதிய அணி உருவானது பலருக்கும் தெரியும். இந்த அணி தேர்தலில் போட்டியிட்டு ஒட்டுமொத்தமாக விஷால் தலைமையில் வெற்றி பெற்றோம். ஆனால், வெற்றிக்குப் பிறகு அணியில் கருத்து வேறுபாடுகள் உருவானது. ஆகவே, சங்கரதாஸ் அணி என ஒன்று உருவானது. அதன் சார்பாக நான் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டிப்போட்டேன். அதில் வாக்குகளை முறையாக எண்ணவில்லை எனப் புகார் எழுந்தது. நானும் அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டேன்.
இதற்குப் பின் பொதுக்குழு கூடியது. அதில் நானும் கலந்துகொண்டேன். இந்தக் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் விஷால், 'தங்கள் அணியை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை வைரஸ்’ என்று பேசினார். கூட்டம் முடிந்ததும், 'விஜயகாந்த் கடனில் சிக்கித் தவித்த நடிகர் சங்கத்தை மீட்டார். இப்போது மீண்டும் கடன் வாங்கிக் கட்டடம் கட்டுவது சரியல்ல. எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று ஒரு ட்வீட் போட்டேன்.
அதைத் தொடர்ந்து ஒரு யூடியூப்க்கு அளித்த பேட்டியில் விஷால் வைரஸ் என பேசியது சரியானதல்ல என்று சொல்லி இருந்தேன். உடனே செயற்குழுவைக் கூட்டி என்னை 6 மாதங்கள் தற்காலிகமாகச் சங்கத்தை விட்டு நீக்கினார்கள். இது 2022இல் நடந்தது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர் பாக்யராஜையும் பாபி என்ற வில்லன் நடிகரையும் நீக்கினார்கள். பாக்யராஜ் தேர்தலில் அஞ்சல் ஓட்டுகளில் குளறுபடி நடந்துள்ளது என்று உறுப்பினர்களுக்குக் கடிதம் போட்டார். அது ஒரு குற்றமா? அதற்காக அவரை இத்தனை வருடம் நீக்கி வைத்திருக்கிறார்கள். அவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து சினிமாவில், சங்கத்தில் இருக்கிறார். அவருக்கே இவ்வளவு பெரிய அவமரியாதை செய்திருக்கிறார்கள்.
ஆறுமாதம் நீக்கம் முடிந்த பிறகு நடந்த பொதுக்குழுவுக்குச் சென்றேன். உடனே காவல்துறையை வரவழைத்தார்கள். நான் அமைதியாகக் கலந்துகொண்டு விட்டு வந்துவிட்டேன். பின்னர் பொதுக்குழுவுக்கு அழைப்பு இல்லாமல் வந்தது தவறு என விளக்கம் கேட்டார்கள். அதற்கும் விளக்கம் கொடுத்தேன். அதன்பின் எனக்கு எந்தப் பொதுக்குழுவுக்கும் அழைப்பு வரவில்லை. 6 மாதம் நீக்கம் தொடர்கிறது.
இந்நிலைதான் திடீரென்று ஒரு கடிதம் இப்போது வந்துள்ளது. அதில் உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்துள்ளார்கள். எனக்குத் தெரிந்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒரே ஒரு செயற்குழு கூட்டத்தில்தான் விஷால் கலந்து கொண்டார். 3 கூட்டங்களுக்கு மேல் கலந்துகொள்ளவில்லை என்றால் விளக்கம் கேட்டு அவரை பதவி நீக்கம் செய்யலாம். இது சங்கத்தின் விதிமுறை. ஆனால், விஷால் என்னை நிரந்தரம் நீக்கம் செய்துள்ளார். நான் எனது நீக்கவே சட்டப்படி செல்லாது என எப்போது நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளேன். நீதி மன்றத்தில் வழக்கு உள்ளபோது என்னை நீக்குவது நீதிமன்ற அவமதிப்பு.
ராதாரவியும் சரத்குமாரையும் எதிர்த்து விஷால் கேள்வி கேட்கலாம். விஷாலை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாதா? நான் சங்கத்திலிருந்த போது 3 கோடி ரூபாய் வட்டி இல்லாமல் கடன் வாங்கி கொடுத்துள்ளேன். அதைத் திரும்பக் கொடுக்க வேண்டுமா இல்லையா? 3 ஆண்டுகளாகத் தேர்தலே நடத்தவில்லை. அது ஜனநாயகமா? இதுவே ஒரு முன்னுதாரணமாக மாறி விடாதா?” என்று பல கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications