விறுவிறு விக்கிரவாண்டி தேர்தல்..பூத்தில் செல்போனுக்கு தடை போட்ட அதிகாரிகள்! சீ.. இதுதான் பிரச்சனையே!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விக்ரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காணை, மாம்பழப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்கு பதிவு இன்னும் தொடங்காத நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செல்போன்களை வாக்காளர்கள் எடுத்துச் செல்ல அதிகாரிகள் தடை விதித்திருக்கின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாம்பழப்பட்டு உள்ளிட்ட மூன்று வாக்குச்சாவடிகளில் இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. அதே மற்ற வாக்குச்சாவடிகளை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அந்த கட்சியின் விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்கு செலுத்த இருக்கின்றனர்.
176 வாக்குச்சாவடிகளில் 42 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகவும் 3 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டிருக்கின்றன. தற்போது அனைத்து வாக்கு சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்டோர் தங்கள் அலுவலகங்களில் இருந்தே தேர்தல் வாக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மொத்தமுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 276 கட்டுப்பாட்டுக் கருவிகள் 276 விவிபேட் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 1135 தேர்தல் பணியாளர்களும் 3000 போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் 3000 த்திற்கும் மேற்பட்ட மத்திய போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காண முடிகிறது. இந்நிலையில் கானை, மாம்பழப்பட்டு உள்ளிட்ட மூன்று வாக்கு சாவடிகளில் வயர் பழுது காரணமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதை அடுத்து பழுதை சரி செய்யும் பணி தொடர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. செல்போன்களை எடுத்து வந்திருந்தாலும் வெளியில் இருக்கும் நபர்களிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் அல்லது வீட்டில் வைத்து விட்டு வாருங்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கேட்டபோது, தற்போது வாக்களிக்கும் போது சிலர் ஒரு சின்னத்திற்கு வாக்களிக்கும் போது வேறு சின்னத்திற்கு விழுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். மேலும் தாங்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது தேர்தல் விதிமீறலாகும், இதன் காரணமாகவே செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications