போர் பதற்றம்: காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்களை மீட்க.. உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு
சென்னை: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தானிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்தியாவின் இந்த தாக்குதல் பாகிஸ்தானை ஆத்திரமூட்டியது.

இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால், நடுவானில் வைத்தே இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது. பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையோரப் பகுதி முழுவதும் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களும் படித்து வருகின்றனர்.
தமிழக மாணவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீருக்குப் படிப்பதற்காகச் சென்ற 41 மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், இலவச எண் 80690 09901 மூலம் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications