சீமான் வீட்டில் பாதுகாவலரை கைது செய்த இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்! இதுதான் மேட்டர்!
சென்னை: சென்னை நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான் வீட்டில் நேற்று காவலாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷுக்கு, 2019 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை பிரவீன் ராஜேஷ் தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் வரும் மார்ச் 3ஆம் தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் நேற்று சென்னை வளசரவாக்கம் போலீசார் ஒட்டிச் சென்ற சம்மன் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு விசாரிப்பதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜ் தலைமையிலான போலீசார் சென்றனர்.
அப்போது சீமான் வீட்டுப் பாதுகாவலர் இன்ஸ்பெக்டரைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த போலீசார், பாதுகாவலரையும் சம்மனைக் கிழித்த சீமானின் உதவியாளர் சுபாகரையும் கைது செய்தனர். சீமானின் பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியையும் போலீசார் லாவகமாகக் கைப்பற்றினர்.
இந்நிலையில் சீமான் வீட்டிற்குச் சென்று, பாதுகாவலரையும், சம்மனை கிழித்த உதவியாளரையும் கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் யார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, கூடவே 16 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில், அன்றைக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். கொல்லப்பட்ட ராஜகுருவுக்கு அப்போது 16 வயதில் ஒரு மகன் இருந்தார். அவர் தான் இன்றைய நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ். ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தின்போது தந்தையை இழந்த பிரவீன் ராஜேஷ், காவல்துறை அதிகாரியானார்.
ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு எதிராக பிரவீன் ராஜேஷின் தாயார் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானின் மனைவி கயல்விழி, சம்மனை படிப்பதற்காகத்தான் தான் அதனை கிழிக்கச் சொன்னதாக விளக்கம் அளித்துள்ளார். காவலாளி மற்றும் சீமான் ஆதரவாளரை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார்.
நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் திட்டமிட்டு 2 பேரை கைது செய்துள்ளார். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் முறையிடுவோம், இன்ஸ்பெக்டர் பிரவீன் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications