வயநாட்டை தட்டி தூக்கிய பிரியங்கா காந்தி.. வாழ்த்து கூறிய கனிமொழி.. சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: வயநாட்டில் சிட்டிங் எம்பியாக இருந்த காங்கிரஸ் ராகுல் காந்தி பதவி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி களமிறங்கினார். களம்கண்ட முதல் தேர்தலிலேயே வயநாட்டில் தன் அண்ணன் ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் வாங்கி பிரியங்கா சாதனை படைத்துள்ள நிலையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். ராகுல் பதவி விலகியதால் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 62.92 சதவீதம் வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மூன்று கட்சிகளுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வயநாடு மக்களவை தொகுதியில், மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, கல்பெட்டா, திருவம்பாடி, எர்நாடு, நிலம்பூர், வண்டூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். வயநாடு காங்கிரஸ் கட்சியின் கோட்டை. அந்த தொகுதியை தக்க வைப்பது காங்கிரஸ் கட்சிக்கு கௌரவ பிரச்னை.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தின் முக்கிய முகமாக பிரியங்கா காந்தியும் இருப்பதால், அங்கு மிகப்பெரிய வெற்றியுடன் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தேர்தல்களில் ராகுல் காந்தி வாங்கிய வாக்குகளை விட பிரியங்கா அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என வியூகம் அமைத்தனர். 2026 கேரளாவில் ஆட்சியமைப்பதற்கான அஸ்திவாரத்தை வயநாட்டில் இருந்து அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் ராகுல் காந்தி 3,61,705 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பிரியங்கா காந்தி 4,08,036 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதன் மூலம் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி வாங்கிய வாக்கை விட பிரியங்கா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி எம்பி கனிமொழி வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மிக துல்லியமாகவும், தைரியமாகவும், தெளிவாகவும், ஆணித்தரமாகவும் பேசக்கூடிய பிரியங்கா காந்தி எதிர்க்கட்சி வரிசையில் இணைவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவரை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications