போயி போயி.. அழுகுரல்களுக்கு நடுவே வயநாட்டில் மீட்பு பணி.. ராணுவத்தை அனுப்புங்க.. தலைவர்கள் கோரிக்கை
சென்னை: மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.
கேரளத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையின் காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று விடிகாலை 2.00 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பலியானோர் எண்ணிக்கை 24ஆக இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 42ஆக உயர்ந்துவிட்டது..

இந்த நிலச்சரிவில் சூரல்பாறை, வேளரிமலை, முண்டகயில், பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் மிக மோசமாக சேதமடைந்திருக்கின்றன.. இதனால், பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்பட்டு வருகிறது.
வயநாடு: கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப்பணியில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். அதேபோல, தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டுள்ளார். கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்ம்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அன்புமணி: அதேபோல, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், "தேவைப்பட்டால், மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் பொள்ளாச்சி சோலையாறு அணை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் உயிரிழந்திருப்பதும் வேதனையளிக்கிறது. நிலச்சரிவில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீட்பு பணிகள்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். தேவைப்பட்டால், மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடங்கி குஜராத் வரை நீளும் 1.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை நமக்கு கொடுத்த பெருங்கொடை ஆகும். அதை பாதுகாக்கத் தவறியதன் விளைவு தான் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகும்.
கனிமவள கொள்ளை: தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையை சூறையாடும் செயல்கள் தொடர்கின்றன. இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் தேவை குறித்து வயநாடு நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எங்கு பார்த்தாலும் வயநாட்டில் கோர காட்சிகளாகவே உள்ளன.. "போயி போயி எல்லாம் போயி" என்று கேரள மக்களின் அழுகுரலுக்கு நடுவே, மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.. உள்ளூர் மக்களும், அழுதுகொண்டே இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்ககள்.












Click it and Unblock the Notifications