அம்மா உணவகத்தை மூடினால் சும்மா இருக்கமாட்டோம்: ஜெயக்குமார் காட்டம்
முதல்வர் தொகுதியிலேயே இடுப்பளவு தண்ணீர் இருக்கும்போது தமிழகத்தை எப்படி பாதுகாப்பார், முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை, நிவாரணம் அறிவிக்கப்படவில்லை, அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இருந்தால் அதைப்பார்த்துக்கொண்டு அதிமுக சும்மா இருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான விருப்பமனுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. ராயபுரம், திருவிகநகர் தொகுதிகுட்பட்ட பகுதியில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

திமுக தலையீடின்றி தேர்தல்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது, "தேர்தல் நியாயமாக, ஜனநாயாக முறைப்படி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக திமுக தலையீடில்லாமல் நடைபெற வேண்டும். செயற்கையான வெற்றியை கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்றது.

நியாயமான தேர்தல் நடத்த வேண்டும்
நியாயாமாக வெளிப்படையாக தேர்தல் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும். 7 மாதத்தில் திமுக அரசின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தியும், வெறுப்பும் உண்டாகியுள்ளது. மக்களுக்கு எதுவும் செய்யாமல் விளம்பரத்தை மட்டும் நம்பி உள்ள அரசு திமுக அரசு.

பாஜக கூட்டணி தொடர்கிறதா?
ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில உரிமைகள் குறித்து திமுக என்ன குரல் கொடுத்துள்ளது? கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி இருந்ததோ அதே கூட்டணியே தற்போதும் தொடர்ந்து வருகிறது.நேற்றைய நிலையையும், இன்றைய நிலையையும் என்னால் கூற முடியும். நாளைய நிலையை என்னால் கூற இயலாது.

சட்டம் ஒழுங்கு சரியில்லை
என்றைக்கு ஒரு பெண் இரவு 12 மணிக்கு முழு நகை அணிந்து சாலையில் நடந்து செல்கிறாரோ அன்றுதான் முழு சுதந்திரம். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் காவல் பணி செய்யும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்துவருகிறது. 'அதிமுகவின் தொண்டனாக இருக்கும் எங்களுக்குக் கட்சிப் பணி, தேர்தல் பணி எனப் பல வேலைகள் உள்ளன. எனவே சசிகலாவைப் பற்றிப் பேச வேண்டிய தேவையில்லை.
ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு மூடு விழா செய்யும் நிலை உள்ளது ஆனால் உலகம் உள்ள வரை ஜெயலலிதாவின் புகழ் நிலைத்திருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் வடிகால்கள் தூர்வாறப்படவில்லை, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை, மழைக்கு நிவாரணம் அறிவிக்காமல், தேங்கியுள்ள மழை நீரை அகற்றாமல் நத்தை வேகத்தில் கூட ஒப்பிட இயலாத அளவிற்கு செயல்படும் அரசாக இந்த அரசு உள்ளது.

அம்மா உணவகத்தை மூட நினைத்தால் சும்மாவிட மாட்டோம்
அதிமுக அரசு பல்வேறு சாதனை செய்துள்ளது, மக்களுக்கு அதனை எடுத்து சொல்லி தேர்தலில் வெற்றி பெறுவோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும். ஏற்கனவே அம்மா உணவகங்களில் சப்பாத்தி, சாம்பார் சாதம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு பணி செய்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை, இதுபோன்ற நிலையில், எதற்கு புதிதாக திமுக தலைவர் பெயரில் உணவகம்? அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திமுகவினர் கருணாநிதி பெயர், ஸ்டாலின் பெயர் என யார் பெயரில் வேண்டுமென்றாலும் உணவகங்களைத் திறந்துகொள்ளட்டும். ஆனால் இதனைத் திறந்து அம்மா உணவகங்களை மூடினால் அதிமுக சும்மா இருக்காது.
Recommended Video

உருப்படியான திட்டங்கள் வேண்டும்
தமிழ்நாட்டில் திமுகவினர் மக்களுக்குப் பயன்படும் வகையில் உருப்படியான திட்டங்களைக் கொண்டுவந்தால் அதனை நாங்களே பாராட்டுவோம்.ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு எனப் பச்சோந்தித் தனமான பேச்சை திமுக பேசிவருகிறது. தேர்தலின்போது ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆனால் அதன்பின் செய்யும் செயல்கள் அதற்கு மாறாகவே உள்ளது". எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications