நீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழ்நாட்டில் பிரதான எதிர்கட்சியாக இருந்து வரும் அ.தி.மு.க, நீட் தேர்வு, பெட்ரோல், டீசல் விலை விவகாரம் ஆகியவற்றில் தி.மு.க அரசு தேர்தலுக்கு முன்பு ஒன்றாகவும், தற்போது வேறு மாதிரியும் பேசி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இது தொடர்பாக நேற்று மாநிலம் முழுவதும் போராட்டமும் நடத்தி விட்டது. இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கடுமையாக எதிர்க்கும் பாஜக
சட்டமன்ற கூட்டம் நடந்தபோது கூட அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை கேட்டனர் பாஜக உறுப்பினர்கள். நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்ததற்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் தோல்வியை தழுவியது பாஜக. பாஜக சட்டமன்றத்தில் ஒன்று பேசுவதாகவும், வெளியில் ஒன்று பேசுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மேகதாது விவகாரம்
இது ஒருபுறம் இருக்க காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக இருக்கிறது. தற்போது கர்நாடகா புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசுவராஜ் பொம்மையும் 'மேகதாது அணை காட்டுவோம்' என்று பிடிவாதமாக இருக்கிறார். மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக இருப்போம் என்று தமிழ்நாடு பாஜக ஏற்கனவே கூறியது.

நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரம், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அக்கட்சியின் துணை தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:- உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு
ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தெளிவான முடிவுகள் எடுக்கவில்லை. நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். நீட் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் எதிர்க்கமாட்டோம்.

அரசுக்கு துணை நிற்போம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் நலனை பாஜக ஒருபோதும் விட்டு கொடுக்காது. மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு எடுக்கும் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications