சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க.ஸ்டாலின் பேசும் ஆன்மிக அரசியல் - வள்ளலாருக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு?

Google Oneindia Tamil News

சென்னை: வள்ளலாரின் பிறந்தநாளை 'தனிப்பெரும் கருணை நாளாக' அறிவித்துள்ளது தமிழக அரசு. பெரியாரின் பிறந்தநாளை 'சமூகநீதி நாள்' என்றும் அம்பேத்கர் பிறந்தநாளை 'சமத்துவ நாள்' என்றும் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.. துரைமுருகன், டிஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள் மீண்டும் திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.. துரைமுருகன், டிஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

 வள்ளலார் 200வது பிறந்தநாள் விழா:

வள்ளலார் 200வது பிறந்தநாள் விழா:

வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இந்நிகழ்ச்சி சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன், அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். நான் தெளிவாகச் சொல்கிறேன். ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, திமுக.

ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானதுதான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி" என்று பேசி எதிர் அணிக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

"வள்ளலாரைப் போற்றுவது திராவிட ஆட்சியின் கடமை. ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, 'இராமலிங்கர் பாடல் திரட்டு' எனும் தலைப்பில் 1940 இல் வெளியிட்டார் பெரியார். அதேபோல் வள்ளலார் நகரை உருவாக்கியவர் தலைவர் கலைஞர்.

ரூ.100 கோடியில் சர்வதேச மையம்:

ரூ.100 கோடியில் சர்வதேச மையம்:

அந்த வரிசையில் வள்ளலார் பிறந்தநாளை நாம் தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துள்ளோம் விரைவில் 'வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

"திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கும் மக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிரானது என்று மதத்தை வைத்துப் பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகிறார்கள்" என அவர் விமர்சித்துள்ளார்.

மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக வள்ளலாரை முன்வைக்கத் தொடங்கி இருப்பது குறித்தும் திராவிட இயக்கத்திற்கும் வள்ளலாரின் தத்துவ மரபுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழனிடம் பேசினோம்.

 திராவிட இயக்கமும் வள்ளலாரும்:

திராவிட இயக்கமும் வள்ளலாரும்:

"வள்ளலாரின் ஊற்றின் இன்னொரு வடிவம்தான் திராவிட இயக்கம்" என்ற கூர்மையான கருத்தை அவர் முன்வைத்தார். "வள்ளலார் மேல்நிலையாக்கத்தை எதிர்த்தார். அதாவது ஆதிக்கப் போக்கை எதிர்த்தார்.

சமஸ்கிருதத்தை எதிர்த்து தமிழை முன்வைத்தார். திராவிட இயக்கமும் மேல்நிலை அதிகாரத்தை மறுத்து உருவானதுதான். அறிவு அனைவருக்கும் பொதுவானது என்றார் வள்ளலார். அறிவை அனைத்து மக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றது திராவிட இயக்கம்.

அறிவு உயர்ந்தநிலையில் இருக்கிறது எனக் கூறப்பட்ட காலத்தில், அதை பொதுவாக்கியவர் வள்ளலார். வள்ளலாருக்கு உயிர் இரக்கம் முக்கியம். அதன் பின்பே அறிவுத்தேடல். வள்ளலார் சோறு போட்டது என்பது ஓர் அடையாளப் பணிதான். பசியோடு இருப்பவனால் அறிவுத்தேடலை மேற்கொள்ள முடியாது என்று வள்ளலார் நம்பினார்.

அதைத்தான் திராவிட இயக்கமும் முன்வைக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவைக் கொடுப்பது என்பது அடையாளப் பணிதான். அதன் மூலம் கல்வி அறிவை பெருக்குவது முக்கியப் பணி. இது வள்ளலார் வலியுறுத்தியது. திராவிட இயக்கம் செய்து காட்டியது.

’நீட்’ எதிர்ப்பும் வள்ளலாரும்:

’நீட்’ எதிர்ப்பும் வள்ளலாரும்:

'நீட்' என்ற தேர்வு மூலம் மேல்நிலை ஆதிக்கம் நடக்கும்போது அதை திமுக எதிர்ப்பது இதன் தொடர்ச்சிதான். ஒன்றிய அரசு ஓரே இடத்தில் அதிகாரத்தைக் குவிக்க முயன்றால் அதை எதிர்ப்பதும் இதே கருத்தாக்கத்தின் நீட்சிதான்.

சிதம்பரம் நடராஜரிடம் 'பாதத்தையாவது எனக்குக் காட்டக்கூடாதா?' என ஏங்கிய வள்ளலார் கடைசியில் அருட்பெரும் ஜோதிக்கு வந்தார். அறியாமையை அகற்ற ஒரு ஒளி. அதுவே அவரது தத்துவம். மனிதனுக்காக மட்டும் நின்றுவிடாமல் எல்லா உயிர்களுக்கும் என்ற நிலைக்கு வந்து சேர்ந்தார். சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பது, சாதிய படிநிலையை உடைப்பது என அனைத்தும் வள்ளலாரிடம் இருந்து திராவிட இயக்கம் பெற்றது. கடவுளை மறந்து மனிதனை நினை என்றார் பெரியார். மனிதனை மீறி ஜீவகாருண்யத்திற்குப் போய்ச் சேர்ந்தார் வள்ளலார்" என்கிறார் கரு. ஆறுமுகத்தமிழன்.

இவரிடம் வள்ளலாரின் ஆரம்பக்கால தத்துவ பின்புலம் குறித்து சில விளக்கங்களைக் கேட்டோம். அதற்கும் மிகத் தெளிவாக பேசினார்.

"வள்ளலார் முதலில் உயிரின் விடுதலை தேடியைத் ஆன்மிக பயணத்தைத் தொடங்கினார். சைவத்திற்குள் நின்றே அவர் பேசினார். சிதம்பர தரிசனம் அவருக்கு இணக்கமாக இருந்தது. ஆகவேதான் தனது பெயருக்கு முன்னால் இன்ஷியல் போட்டுக் கொள்ளாமல் 'சிதம்பரம் இராமலிங்கம்' எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.

அப்பா பெயரும் வள்ளலாரும்:

அப்பா பெயரும் வள்ளலாரும்:

அவரது அப்பா பெயர் இராமையா பிள்ளை. தனது இன்ஷியலாக 'ரா'னாவைதான் போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் 'சிதம்பரம்' என்ற ஊர்ப் பெயரைச் சேர்த்துக் கொள்கிறார். அந்த அளவுக்குச் சிதம்பரம் மேல் அவருக்குப் பற்று இருந்தது.

முதலில் சைவ சமயவாதியாகத் தனது ஆன்மிகத்தைத் துவங்கிய வள்ளலார், ஆறாம் திருமுறைக்குப் பின் சமூக சீர்திருத்தவாதி என்ற நிலைக்கு வந்து சேர்ந்தார். சமயம் எப்போதும் தன்னுடையக் கட்டுக்குள் மனிதர்களை வைத்துள்ளது. சடங்கு, விதிமுறைகள், ஒழுக்கம் இதற்குள்ளாகவே மனிதர்கள் இயங்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. சமயம் என்பது எதை ஒன்றையோ சார்ந்திருக்க வேண்டிப் போதிக்கிறது. அப்படிச் சார்ந்திருந்தால் சுரண்டப்படுவோம். ஆக இந்தச் சுரண்டலிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்கு வழி ஜீவகாருண்யம் என்ற நிலையை அடைக்கிறார்.

சமஸ்கிருத மொழி எதிர்ப்பில் வள்ளலார்:

சமஸ்கிருத மொழி எதிர்ப்பில் வள்ளலார்:

சைவம், வைணவம், வேதம் , ஆகமம். உபநிடதம் இவற்றை நம்பாதீர்கள் என்று வள்ளலார் வெளிப்படையாகவே அறிவிக்கிறார். இந்த ஆன்மிகத்தைத் தேங்காய் நியாயம் என்று குறிப்பிடுகிறார். தேங்காய் மரத்தின் உச்சியில் இருக்கிறது. அதைப் பறிக்க ஒரு ஆள் வேண்டும். வெட்ட ஒரு ஆள் வேண்டும். ஒருவன் பறித்து போட்டாலும் அதை என்னால் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை. இதே மாம்பழமாக இருந்தால் யார் உதவியும் இல்லாமல் அதை என்னால் உண்ண முடியும்.

தேங்காய் போன்றது சமஸ்கிருதம். அதில் சொல்லப்பட்டுள்ள அறிவு எளிய மனிதனுக்கு நேரடியாகப் போய்ச் சேரவில்லை. உரையாசிரியர் தேவை. அவர் தரும் விளக்கம் அவரது பார்வையில் உள்ளது.

தமிழில் அந்தச் சிக்கல் இல்லை. அது என் மொழி. சொன்னால் விளங்குகிறது. சமஸ்கிருதம் மாதிரியான டம்பமான மொழிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தமிழ் போன்ற இனிய, எளிய மொழியில் என் உள்ளத்தை ஈடுபடுத்தியமைக்கு வந்தனம் வந்தனமே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்.

பசித்தவனுக்கு முதலில் உணவு:

பசித்தவனுக்கு முதலில் உணவு:

ஆன்மிகத்திலும் இதேதான். இந்த வேதம், ஆகமம், சமய மரபுகள் எல்லாம் மேல்நிலையில் உள்ளது. சாமானியர்களுக்கு எட்டவில்லை. எளிய மனிதனுக்கு எட்டக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அது பசி. ஒருவனுக்குப் பசித்தால் அது எனக்குப் புரிகிறது. இந்த உயிர் இரக்கம் என்பது எல்லா மனிதனின் உள்ளாக இயல்பாகவே இருக்கிறது. ஆகவே அவனுக்கு உணவைக் கொடு. அவனுள் ஜீவரசம் கொஞ்சம் ததும்பட்டும். அதன் பிறகு அறிவை அவனே தேடிக் கொள்வான் என்கிறார்.

இதற்கான தீயைத் திருமூலரிடம்தான் பிடிக்கிறார் வள்ளலார். 'யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை; யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை; யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி; யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே' என்பதிலிருந்து எடுக்கிறார்.

 அண்ணா முதல் ஸ்டாலின் வரை:

அண்ணா முதல் ஸ்டாலின் வரை:

'அறிவினால் ஆகுவதுஉண்டோ பிறிதின்நோய்; தம்நோய்போல் போற்றாக் கடை ' என்ற வள்ளுவரின் குறளிலிருந்து இதைத் திருமூலர் இதை எடுத்தார். திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் இந்த மூன்று நூல்களைத்தான் வள்ளலார் கொண்டாடுகிறார்.

திராவிட இயக்கம் திருக்குறளை முன்வைக்கிறது. திருமூலர் சொன்ன 'ஒன்றே குலம்; ஒருவன தேவன்' என்பதைத்தான் அண்ணா முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்டாலின் இன்று வள்ளல் பெருமானை முன்வைக்கிறார்" என்கிறார் ஆறுமுகத்தமிழன்.

English summary
The Tamil Nadu government has declared Vallalar's birthday as a 'Special Mercy Day'. Chief Minister M. K. Stalin announced Periyar's birthday as 'Social Justice Day' and Ambedkar's birthday as 'Equality Day'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X