விமானநிலையம் வடிவில் ஒரு பேருந்து நிலையம்.. வியக்க வைக்கும் கிளாம்பாக்கம்
சென்னை: கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்தப் புது பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் என்ன? சிறப்புகள் என்ன?
இந்தக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நுழைவு வாசலைத் தாண்டி உள்ளே சென்றால், அங்கே உள்ள வரவேற்பு அறையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் புதிய சிலை முன்பாக நின்று பயணிகள் பலரும் செல்ஃபி எடுத்துக் கொள்வதை நம்மால் காண முடிகிறது.

இந்த வரவேற்பு அரங்கத்தில் வடிவமைப்பு மிக நவீனமாக இன்றைய காலத் தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. மேலே உச்சியில் உள்ள ஒரு மின்விசிறி கூட, வழக்கமான டிசைனில் இல்லாமல் பார்ப்பதற்கு மாடர்ன் ஆக இருக்கிறது.
மேலும் இங்கே அமைக்கப்பட்டுள்ள தூண்கள்கூட சிறப்பாக உள்ளன. உள்ளேயே எக்ஸ்சலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்குச் சிரமப்பட வேண்டாம்.

சுருக்கமாகச் சொன்னால், இதன் வடிவமைப்பு பேருந்து நிலைய சாயலில் இல்லை. ஏதோ எக்ஸ்பிரஸ் அவன்யூ, ஃபோரம் மால் போன்ற ஷாம்பிங்க் காம்ப்ளக்ஸ் உள்ளாக வந்த ஒரு உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.
கோயம்பேடு பேருந்துநிலையத்தைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகள் மட்டுமே உள்ளே நிறுத்தப்பட்டிருக்கும். அப்படி இல்லாமல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு உள்ளாகவே ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்குத் தனி இடத்தை அரசு ஒதுக்கி உள்ளது.

இதனால் பயணிகள் ஆம்னி பேருந்துகளைத் தேடி வெளியே எங்கேயும் அலையத் தேவையில்லை. உள்ளேயே வசதியாக பஸ் பிடித்து அமர்ந்து கொள்ளலாம் என்பது நல்ல விசயம்.
அடுத்தபடியாக பேருந்து நிலையத்திற்கு உள்ளாக அவசர சிகிச்சை மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையம் முற்றிலும் இலவச மையமாகச் செயல்பட்ட தொடங்கி உள்ளது. அதன் உள்ளாகவே மருத்துவர்களும் உள்ளனர். மருந்துக் கடையும் உள்ளது. இந்த மையத்தைத் தனியார் மருத்துவமனை ஒன்று நிர்வகித்து வருகிறது.

இதனை ஒட்டியே தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகத் தனி அறையும் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் அடித்தளம் 2 முழுக்க வாகனங்கள் நிறுத்துவதற்கான பகுதி யாக செயல்படுகிறது. அங்கிருந்து மேலே வர லிஃப்ட் வசதி பக்காவாக உள்ளது. அடுத்து அடித்தளம் 1 கூட வாகனங்கள் நிறுத்துவதற்கான பகுதிதான். அடித்தளம் ஒன்றில் 2ஆயிரம் வாகனங்களை நிறுத்தலாம். அதைப்போல்தான் 2.
முதல் தளமானது பயணிகள் தங்கும் இடம். தரை தளத்தில்தான் பயணிகளுக்கான நடைமேடை செயல்படுகிறது.
இந்த வாகன நிறுத்தும் இடங்களில் பாட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போடுவதற்கான தனித்தனி பாயிண்டுகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இதனை இலவசமாகப் பயன்படுத்த முடியாது.

அங்கே அதற்காக ஒரு க்யூ ஆர் கோடு உள்ளது. அதை ஸ்கேன் செய்தால் உங்கள் வாகனத்தை சார்ஜ் செய்ய முடியும். அதற்கான கட்டணத்தை நீங்கள் அந்த ஆப் மூலம் செலுத்திவிடலாம்.
இங்கே அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகளில் ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயன்படுத்தலாம். ஒருவேளை மின்சாரம் இல்லாமல் உள்ள போது நடந்தே செல்வதற்குப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதை அவசர தேவைக்குப் பயன்படுத்தலாம் என்று அங்கு அமைக்கப்பட்டுள்ள பலகைகள் தகவல் தருகின்றன.
இந்த பேருந்து நிலையத்திற்கு உள்ளாகவே நிறையக் கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால், அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒரு பிரம்மாண்டமான இடவசதியுடன் ஒரு காபி கடைக்கான பகுதியும் ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கே அமர்ந்து காபி அருந்தலாம்.

இங்கே அமைக்கப்பட்டுள்ள குளியலறை மற்று கழிப்பறை வசதிக்கான இடங்கள் மிக நவீன வடிவில் உள்ளன. அங்கேயே பயணிகள் அமர பெட் வசதி உள்ளது. அதைப் போல் லாக்கர் அறைகள் உள்ளன.
பயணிகள் அங்கே உள்ள வைப்பறைகளில் அவர்களின் உடைமைகளை வைத்துப் பூட்டிவிட்டு, பின்னர் குளியல் போடலாம். அதற்குத் தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வருபவர்கள் தனியே லாட்ஜ் தேடி அலையத் தேவையில்லை. குளித்துவிட்டு, தங்களின் வேலைகளைப் பார்த்து விட்டு மீண்டும் இதே இடத்திற்கு வந்து பயணத்தைத் தொடங்கலாம். ஒருநாள் தேவைக்காகச் சென்னை வருபவர் கள் மினி பட்ஜெட்டில் தங்களின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு உகந்த மாதிரியான தனிக் கழிப்பறை மற்றும் குளியலறைகளை உருவாக்கித் தந்துள்ளார்கள். இதைவிட ஹைலைட் என்னவென்றால் திருநங்கைகளுக்கு என்று தனியே சில கழிப்பறை களை அமைத்துத் தந்துள்ளது அரசு.
பயணிகளுக்கு மட்டுமா இந்த வசதி என்றால், அதான் இல்லை. இங்கே ஓட்டுநர், நடத்துநர்கள் கூட நன்றாக அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். அவர்கள் தங்குவதற்கு நல்ல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்த இடம் முழுக்க முழுக்க ஏசி வசதிகளுடன் இயக்கப்படுகிறது.
இவர்களைப் போலவே தூய்மைப் பணியாளர்களுக்கு என்று தங்கும் இடமும் அமைத்துத் தரப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தின் ஹைலைட்ஸ் என்றால் மேற்கூரை. நல்ல சூரிய வெளிச்சம் உள்ளே வரும்படி அமைத்துள்ளனர். அதனால் இயற்கையான வெளிச்சம் அரங்கத்தை மேலும் அழகாகக் காட்டுகிறது.
இந்தப் பேருந்து நிலையத்தின் உட்புறம் மிக அழகாக உள்ளது. சுவர்களில் குழந்தைகள் ரசிக்கக்கூடிய அளவில் நல்ல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்தச் சுவர் ஓவியங்கள் தமிழ் அடையாளங்களால், தமிழ்க் கலாச்சாரங்களால் நிரம்பி வழிகின்றன.
இந்தக் காலத்தில் பயணிகள் பேக் எடுக்காமல் கூட வெளியூர்களுக்குப் பயணம் செய்கிறார்கள். ஆனால், மொபைல் போன் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் யாரும் இல்லை. எனவே அதை மனதில் வைத்து நிறைய இடங்களில் பரவலாக மொபைல் போன்களை சார்ஜ் போடுவதற்கான மின் பெட்டிகளை அமைத்துத் தந்துள்ளனர்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகள், தாய்மார்கள் எனப் பலரையும் அழைத்துச் செல்ல பாட்டரி மினி வாகனங்கள் உள்ளேயே இயக்கப்படுகின்றன. அதில் ஏறி பயணிகள் பலன் பெறலாம்.
இந்தப் பேருந்து நிலையம் முழுக்க கண்காணிப்பு கேமிராக்கள் 360 டிகிரியில் கண்காணித்தபடியே உள்ளன.
இந்தப் பேருந்து நிலையம் பற்றி அமைச்சர் சேகர்பாபு, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தளவில் கிட்டத்தட்ட 86 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் 6 லட்சத்து 80 ஆயிரம் சதுரடி கட்டுமானம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு இன்னும் அதிகப்படியான தேவைகள் உள்ளன.
ஆனால், அவை கடந்த காலங்களில் சரியாகத் திட்டமிடப்படவில்லை. எங்கள் ஆட்சி வந்த பிறகுதான் பல்வேறு விசயங்களைத் திட்டமிட்டு, செய்துள்ளோம்.
உதாரணமாகச் சின்ன மழை பெய்தாலே பெரிய அளவில் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அதைச் சரி செய்வதற்காக 13 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகளைச் செய்துள்ளோம். முழுமையாக மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்றால் இன்னும் சில பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தென்னக ரயில்வே இடத்தில்தான் அப்பணிகள் நடைபெற வேண்டும்.

ஆகவே தென்னக ரயில்வேயிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் 14 கோடி ரூபாய் அதற்குச் செலவாகும் எனத் திட்ட மதிப்பை அளித்துள்ளனர். அந்தத் தொகையைத் தமிழ்நாடு அரசும் தென்னக ரயில்வேயும் சமமாகப் பிரித்துக் கொள்வதாகத் திட்டமிட்டிருக்கிறோம்.
அதைப்போல் பயணிகள் அதிகமாகக் கூடும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு என்று தனியே ஒரு காவல்நிலையம் தேவையாக உள்ளது. அதைக் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலே முதல்வர் அறிவித்திருந்தார். அந்தக் காவல்நிலையம் 13 கோடி ரூபாய் செலவில் கட்ட இருக்கிறோம். 14 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டு, அதற்கான வேலைகள் நிறைவடைய உள்ளன.
மேலும் கிளாம்பாக்க பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அங்கிருந்து ரயிலில் பயணிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தர முதல்வர் முயற்சிகளை எடுத்துள்ளார்.
அதனடிப்படையில் 20 கோடி செலவில் அங்கே ரயில் நிலையம் அமைக்கச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வழங்கி உள்ளது. நடை மேம்பாலங்களை அமைப்பதற்கான நிலங்களை ஆர்ஜிதப்படுத்த 40 கோடி ரூபாயையும் ஸ்கை வாக் அமைப்பது என ஒட்டுமொத்தமாக 140கோடி ரூபாயைச் செலவிட உள்ளோம்.
இவ்வாறு இன்னும் 50 ஆண்டுகளுக்கான தேவைகளை ஆராய்ந்து அதற்கான கட்டமைப்பு வசதிகளைச் செய்ய உள்ளோம்" என்கிறார்












Click it and Unblock the Notifications