உங்க கிரெடிட் கார்டில் நண்பருக்கு பணம் எடுத்து கொடுத்தால் மொத்தமா காலி! ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை
சென்னை: நம்மில் பலரும் நண்பருக்கு கிரெடிட் கார்டில் பணம் கொடுத்திருப்போம். நண்பர் திருப்பித் தந்துவிடுவார். நமக்கும் வட்டி இல்லை என பலரும் எடுத்துக் கொடுத்திருப்போம். ஆனால், அது அவ்வளவு நல்லது இல்லையாம்.. பெரிய ஆபத்தே இதில் மறைந்து இருப்பதாக எச்சரிக்கிறார் ஆனந்த் சீனிவாசன். இதுபோல நண்பருக்காக கிரெடிட் கார்டு கொடுத்தால் அது நம்மை மொத்தமாகக் காலி செய்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்.
சில நேரங்களில் நமது நண்பர் யாராவது வந்து, தங்கள் செலவுக்கு கிரெடிட் கார்டு கேட்பார்கள். அதாவது நமது கிரெடிட் கார்டில் ஒரு பொருளை வாங்கிக் கொண்டு அந்த 45 நாட்கள் காலத்தில் பணத்தைக் கொடுப்பதாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் கிரெடிட் கார்டில் லோன் எடுத்துக் கொடு நான் கட்டிக்கொள்கிறேன் என்பார்கள். நாமும் சில நேரம் அவசரத்திற்குப் பணத்தைக் கொடுத்திருப்போம்.

ஆனந்த் சீனிவாசன்
ஆனால், இது மாதிரி செய்வது நம்மை பெரிய ஆபத்தில் தள்ளிவிடும் என எச்சரிக்கிறார் ஆனந்த் சீனிவாசன். நண்பர் கேட்கிறார் என நல்ல எண்ணத்தில் நீங்கள் உதவி செய்யப் போனால் அது உங்களையே காலி செய்துவிடுமாம். இதில் இருக்கும் பிரச்சனை என்ன.. இதைச் செய்தால் வரும் சிக்கல் என்ன என்பதைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாகச் சமீபத்தில் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "இந்த விவகாரத்தில் முதலில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.. ஒருத்தனுக்கு வேறு எங்கும் கடன் கொடுக்காததால் தான் அவன் உங்களிடம் வருகிறான். அப்படி என்றால் அவன் கடன் வாங்கத் தகுதி இல்லாதவன் என்று அர்த்தம். அதாவது அவனால் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது.
லோன் சிக்கல்
இன்றைய நவீனக் காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் ஒருவருக்குக் கடன் கொடுக்க வேண்டுமா கூடாதா என்பதை கம்ப்யூட்டர் தான் முடிவு செய்யும். பல்வேறு காரணங்கள், பக்காவான டேட்டாவை வைத்து பிளான் செய்து ஒருவருக்குக் கடன் கொடுக்கலாமா.. இல்லையா என்பதைச் சொல்லிவிடும். சொல்லப் போனால் உங்கள் வருவாயில் 70%ஐ நீங்கள் இஎம்ஐ ஆகச் செலுத்துவீர்கள் என்பதைக் கூட கணக்கிட்டு லோன் கொடுத்துவிடுவார்கள். அதாவது உங்கள் சம்பளத்தில் ஒரு ரூபாயில் 70 பைசா வரை நீங்கள் திருப்பித் தருவீர்கள் என்று நினைத்து கடன் கொடுக்கக் கூட தயாராக இருக்கிறார்கள்.
இரண்டு காரணங்கள்
எனவே, இதையும் தாண்டி கடன் கொடுக்கவில்லை என்றால் அதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர்கள் கடந்த காலங்களில் லோன் வாங்கி உரிய முறையில் திரும்பச் செலுத்தாமல் இருக்கலாம்.. அல்லது அவர்களுக்குச் சரியான வருமானமே இருக்காது. கடன் கொடுத்து வசூலிப்பதையே தொழிலாகச் செய்பவனாலேயே கடன் கொடுக்க முடியாது எனச் சொல்லிவிட்ட பிறகு, உங்களிடம் வந்து கடன் வாங்குவது எமோஷ்னல் பிளாக்மெயில் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
அப்படியே உங்கள் நண்பருக்கு உதவ வேண்டும் என்றால் அதை கிப்ட்டாக நினைத்துக் கொடுங்கள். திரும்ப அந்தப் பணம் வரும் என நினைக்காதீர்கள். அதாவது உங்கள் நண்பர் வந்து ஒரு லட்ச ரூபாய் கேட்கிறார்.. என்னால் ஒரு லட்ச ரூபாய்க் கடனாகக் கொடுக்க முடியாது. ஆனால், கைவசம் ரூ.10 ஆயிரம் இருக்கிறது. அந்த ரூ.10 ஆயிரம் போனாலும் பிரச்சனை இல்லை என்றால் அதை மட்டும் கொடுங்கள். ஆனால், அந்தத் தொகை திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம்
மொத்தமாகக் காலி
நான் ஏதோ புதிதாகச் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். இது பரவலாக நடப்பது தான். நண்பர்கள் கஷ்டம் எனப் பணம் கேட்கிறார்கள் எனக் கொடுத்தால்.. நண்பர்களும் போய்விடுவார்கள்.. உங்கள் பணமும் போய்விடும் அதுவே நிதர்சனமான உண்மை. பணத்தை வாங்கிவிட்டு ஓடிவிடும் சம்பவங்கள் எல்லாம் கூட நடக்கிறது. தகுதிக்கு மீறி செலவு செய்வதாலேயே கடனாகிறது. அதாவது உங்கள் வருமானம் தான் தகுதி, அதைத் தாண்டி செலவு செய்யும்போது கடன் வருகிறது. உங்கள் தகுதிக்குள் செலவு செய்தால் கடன் வராது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications