தொட்டதெல்லாம் வெற்றி.. கேஎஸ் அழகிரி தலைமையில் சரவெடி கொளுத்திய தமிழக காங்கிரஸ்.. ரெக்கார்டை பாருங்க!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கேஎஸ் அழகிரி அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். கேஎஸ் அழகிரி பதவி காலத்தில், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் சந்தித்த தேர்தல்களில் அமோக வெற்றிகளைப் பெற்றது. அவரது தலைமையில், காங்கிரஸின் தேர்தல் டிராக் ரெக்கார்டை பார்க்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கேஎஸ் அழகிரி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேஎஸ் அழகிரி மாற்றம்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தலைமை, திடீரென தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வரும் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே மூத்த தலைவர்கள் காங்கிரஸ் மேலிடத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்த போதும், கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால், அப்போதும் கேஎஸ் அழகிரி மாற்றப்படவில்லை. அதற்குக் காரணம், கேஎஸ் அழகிரியின் டிராக் ரெக்கார்டு.
தொட்டதெல்லாம் வெற்றி: கேஎஸ் அழகிரி, கடந்த 2019 பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் தலைமையில் தமிழக காங்கிரஸ் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.
கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும், 2021 மாநில சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதியில் போட்டியிட்டு 18 இடங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியைப் பெற்றதால், அவர் மீது காங்கிரஸ் தலைமை நல்ல அபிப்ராயத்தையே வைத்துள்ளது.
செம ரெக்கார்ட்: இந்தியா முழுக்க, காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான சரிவுகளும், சோதனைகளும் நடந்தபோதும், தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு என்பதே இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு, 8 எம்.பிக்களும், 18 எம்.எல்.ஏக்களும், ஒரு மேயரும், 2 துணை மேயர்களும் ஏராளமான நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் கிடைத்துள்ளனர்.
2019 எம்.பி தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற எச். வசந்தகுமார் மறைவை தொடர்ந்து, குமரி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார். 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அங்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். இப்படியாக, பொதுத் தேர்தல்கள் மட்டுமல்லாது, போட்டியிட்ட 2 இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன் அமோக வெற்றியைப் பெற்றது.
இந்தியாவில் எங்கும் நடக்காதது: அதேபோல, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மாற்றுக் கட்சிகளுக்குச் செல்லவில்லை. காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பல மாநிலங்களில் பாஜகவுக்கு தாவியுள்ள நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை அந்த நிலை ஏற்படவில்லை. அதிருப்தியில் இருப்பவர்களையும் அரவணைத்துச் சென்றார் கேஎஸ் அழகிரி. கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அனுசரித்துச் செல்வதில் பெயர்போனவர் கேஎஸ் அழகிரி.
எனினும், தமிழ்நாட்டில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாலும், கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை நெருங்கி விட்டதாலும், லோக்சபா தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அவரது அணுகுமுறை, சீனியர்கள் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாலும் அவரை மாற்ற தலைமை முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
அடேங்கப்பா.. காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஹிஸ்டரிய பாருங்க! இத்தனை கட்சிகளில் இருந்துள்ளாரா?
பதவிக்காக யார் வீட்டு படியையும் மிதிக்க மாட்டேன்: கடந்த ஆண்டு, காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படலாம் என பேச்சுகள் எழுந்தபோது பேட்டி அளித்திருந்தார் அழகிரி. அப்போது பேசிய அவர், “நான் எந்த பதவிக்கும் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. பலர் தங்களுக்குப் பதவி கேட்டும் எனது பதவியை பறிக்க கோரியும் டெல்லிக்கு போய் வருகிறார்கள். ஆனால் நான் மாநில தலைவராக இருக்கும் காலத்தில் பதவி கேட்டு டெல்லிக்குப் போனதில்லை. ஐந்தாறு முறைதான் நான் டெல்லிக்கே போயிருக்கிறேன். பதவி கேட்டு யார் வீட்டு வாசல்படியையும் மிதிக்கும் பழக்கம் எனக்கு இல்லை." எனத் தெரிவித்தார்.
"தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்.." வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேஎஸ் அழகிரி, 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக சிதம்பரம் தொகுதியில் எம்.எல்.ஏ ஆனார். அதன்பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 1996ல் எம்.எல்.ஏ ஆனார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கடலூரில் போட்டியிட்டு எம்.பி ஆனார். 2014 எம்.பி தேர்தலில் மீண்டும் கடலூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications