இது லிஸ்ட்லயே இல்லையே.. திமுகவுக்கு எதிராக பாஜகவின் "2 அஸ்திரம்"..அண்ணாமலை வேற இப்படி சொல்லிட்டாரே
சென்னை: 2 விதமான வியூகங்களை முன்னெடுத்து பாஜக, கச்சிதமாக காய்களை நகர்த்தி வருகிறது.. இது எந்த அளவுக்கு பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத்தரும் என்பதில் மிகப்பெரிய ஆர்வம் எழுந்துள்ளது.
இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. அந்தவகையில், 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்கையும் அறிவித்துள்ளனர்.. எனவே, இதற்கான சுற்றுப்பயணங்களையும் தேசிய தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.. பாஜகவின் வேட்பாளர்களும் மிக கவனமுடன் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்...

பிரச்சாரங்கள்: இந்த முறை தேர்தலுக்கு 2 விதமான வியூகங்களை பாஜக திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள். அதாவது, தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை பயன்படுத்தவும் பாஜக திட்டமிட்டு வருகிறதாம்..
இவர்களுக்காகவே பாஜகவில் தனி அணி உருவாக்கப்பட்டு மாநிலம், மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை கட்சியில் சேர்க்கும் பணி, பாஜக அரசு தொடர்பு பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாஜக வியூகம்: அத்துடன், மத்திய, மாநிலங்களில் 80 துறைகளிலிருந்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை கட்சியில் சேர்க்கவும் அல்லது ஆதரவாளர்களாக மாற்றவும், தேர்தல் நேரத்தில் இவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பிரச்சாரத்தில் இறக்க காரணம், மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் விவரங்கள் தெரிந்திருக்கும் என்பதால், அந்த விவரங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படும் என்று பாஜக நினைக்கிறதாம். அதனால், ஓய்வு பெற்ற அதிகாரிகள் முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு உள்ளதாம்.
பாஜக கொங்கு: இதனிடையே நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, "எழுதி வெச்சுக்குங்க.. கோவையில் பாஜக வெல்லும். நிச்சயம் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில் பாஜக தான் வெல்லும்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு கொங்குவில் ஓரளவு வாக்குகள் உள்ளது என்றாலும், திமுக, அதிமுக இருவருமே கொங்குவை கைப்பற்ற மும்முரம் காட்டிவருகிறார்கள்.
அதனால்தான் இன்னொரு புதுயுக்தியை பாஜக கொங்குவில் இறக்க முடிவு செய்துள்ளதாம். அதன்படி, தொழில் நகரமான திருப்பூரில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் ஓட்டுக்களை குறி வைத்திருக்கிறதாம்.
தொழிலாளர்கள்: உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூர், கோவை தங்கி பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்..
எனவே, வெளிமாநில தொழிலாளர்கள், தொழில் துறையினரின் ஓட்டுக்களை பாஜகவுக்கு கொண்டு வருவதற்காக, பிறமொழி பிரிவினர் கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம். திருப்பூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வும் நடந்து வருகிறது.
சாத்தியமா?: ஆனால், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை பிரச்சாரத்தில் களமிறக்குவதும், வெளிமாநில தொழிலாளர்களின் ஓட்டுக்களை குறி வைப்பதும், பாஜகவுக்கு சாத்தியங்களை பெற்றுத்தருமா? தெரியவில்லை.. ஆனால், மூத்த தலைவரும், காந்தியவாதியுமான தமிழருவி மணியன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜகதான் என்றும் ஆரூடம் சொல்லி உள்ளார்.
தமிழருவி மணியன் சொல்லும்போது, "50 வருடங்களுக்கு மேலாகவே, கொள்ளையர்கள் கூடாரமாக இந்த தமிழகம் இருக்கிறது.. மாறி மாறி இந்த திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து மக்களுடைய பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து விட்டார்கள். அதிமுக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது திமுகவிடமிருந்துதான்.
3வது சக்தி : தமிழகத்தில், அரசியலில் அத்தனை சீர்கேடுகளையும் தொடங்கி வைத்தது திமுக தான். திராவிட கட்சிகளுக்கு எதிராக தனித்து நின்று களமாடும் சீமானை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.. நிச்சயம்15 முதல் 20 சதவீதம் என்ற அளவுக்கு உயரும். மூன்றாவது சக்தி உருவெடுப்பதற்கான காலம் இது தான்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications