"அவங்க கேட்பது நடக்காது!" ஆளுநருக்கு எதிராக முறையிடும் திமுக! அடியோடு மறுக்கும் எல்.முருகன்! பரபர
சென்னை: தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது.
அதிலும் தமிழ்நாட்டில் இந்த மோதல் உச்சத்தில் உள்ளது. தமிழக அரசு அனுப்பும் பல கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை திமுகவினர் முன்வைக்கின்றனர்.

மோதல்
மேலும், தொடர்ச்சியாக அரசியல் ரீதியான கருத்துகளை ஆளுநர் ரவி கூறி வருவதாகவும் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் திமுகவினர் கூறிகன்றனர். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து, இதற்கான குறிப்பாணையில் கையெழுத்திட திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எல் முருகன்
இதற்கிடையே இது குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரு.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. ஏற்கனவே 400 பேருக்கு போலீஸ் வேலை கொடுக்கப்பட்டுள்ளது..

புதுச்சேரி
10 ஆயிரம் பேருக்குப் புதுச்சேரியில் வேலை கொடுக்க முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக 1,400 பேருக்கு வேலை கொடுக்க உள்ளோம்.. மேலும் இங்கு 750 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் புதுச்சேரியில் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு
புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.. தமிழக மீனவர்களைக் கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. அதே நேரம் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் அறிக்கை வந்த பின் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்விதானே கேட்கிறார்
இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல்படுகின்றார், ஆளுநர் கருத்துச் சொல்லக்கூடாது என்று எப்படிக் கேட்க முடியும்? ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள், அதனால் ஆளுநரை மாற்றிவிட்டு.. அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்கிறார்கள். அதெல்லாம் நடக்காது. திமுக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் விளக்கம் தானே கேட்கிறார்.

நடக்காது
அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்று கேட்பதா? புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வர் இணைந்து பணியாற்றுகின்றார்கள்.. மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனப் புதுச்சேரி முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தான் உரிய முடிவெடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications