ஆளுநர் ரவி விளையாடுறார்.. தமிழ்நாடு அரசின் பாயிண்ட்! நீங்க சொல்ற விஷயம் கவலை தருது... தலைமை நீதிபதி
சென்னை: நீங்கள் இங்கே குறிப்பிடும் பிரச்சினைகள் தீவிர கவலையை எழுப்புகின்றன என்று தமிழ்நாடு அரசிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் கூறியுள்ளார்.
கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கவி உள்ளிட்டோர் ஆஜர் ஆனார்கள்.

தமிழ்நாடு மனு: தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார்
தினசரி ஆவணங்கள், பணி நியமன ஆணைகள், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றில் ஆளுநர் கையொப்பமிடாமல், குறுக்கே நிற்கிறார். அதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றுவது உள்ளிட்ட ஊழல் வழக்குகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் குறுக்கே நிற்கிறார் என்று தமிழ்நாடு அரசு மனுவில் கூறியது.
இந்த வழக்கில் வாதங்கள் பின்வருமாறு வைக்கப்பட்டன:
தலைமை நீதிபதி கேள்வி; மசோதாக்களை எத்தனை நாட்களுக்கு ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்க வேண்டும் என்று உள்ளது.
தமிழ்நாடு அரசு தரப்பு : மசோதா தாக்கல் செய்யப்பட்டது நிறைவேற்றப்பட்டதும் "உடனே" அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரை இந்த பிரச்சனை பரவி வருகிறது.
தலைமை நீதிபதி கேள்வி; உங்களின் மசோதாக்கள் எப்போது நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பு : இதெல்லாம் 2-3 வருடங்கள் முன் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள். ஆனால் இன்னும் நிறைவதேராவில்லை. மசோதாக்கள் தொடங்கி நியமனங்கள் வரை பலவற்றில் ஆளுநர் கையெழுத்திடவில்லை. 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. டிஎன்பிஎஸ்சி நியமன தலைவர் உத்தரவில் கையெழுத்து போடவில்லை. மக்கள் சிறையில் இருக்கிறார்கள், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. இந்த விடுதலைக்கும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. எங்களின் கொள்கை முடிவிற்கும், முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை . டிஎன்பிஎஸ்சியில் தலைவர் பதவி உட்பட 14 பதவிகளில் 10 பதவி காலியாக உள்ளது. அரசு எப்படி இயங்க முடியும்?
தலைமை நீதிபதி: நீங்கள் இங்கே குறிப்பிடும் பிரச்சினைகள் தீவிர கவலையை எழுப்புகின்றன. டிஎன்பிஎஸ்சியில் தலைவர் பதவி உட்பட 14 பதவிகளில் 10 பதவி காலியாக உள்ளது கவலை அளிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். விதி 200ன் கீழ் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12 மசோதாக்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. அனுமதி வழங்குதல், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தல், நியமனங்கள் போன்ற பிற விஷயங்கள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புகிறோம், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications