விஷயம் சீரியஸ்.. எழிலகம் உள்ளேயே புகுந்து! கண் வைத்த முதல்வர்.. ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டது எப்படி?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் முதல்முறையாக நேற்று செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் ஏற்கனவே 3 சிறிய அளவிலான குட்டி குட்டி இலாக்கா மாற்றங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. ஆனால் மொத்தமாக பெரிய இலாக்கா மாற்றி அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் நிர்வாகி ஒருவரை ஜாதி சொல்லி திட்டியதாக எழுந்த புகார் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக சொன்னாலும் இந்த முடிவு எப்போதோ எடுக்கப்பட்டுவிட்டதாக அறிவாலய தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாதி மோதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதி ஒன்றிய சேர்மன் தருமனுக்கு (அதிமுகவை சேர்ந்தவர் ) மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த ராஜேந்திரனை தனது வீட்டிற்கு அழைத்து ஜாதி ரீதியாக திட்டியதாக ராஜகண்ணப்பன் மீது புகார் உள்ளது . இந்த புகார்தான் தற்போது ராஜகண்ணப்பன் சர்ச்சையில் சிக்க காரணம். ராஜேந்திரன் தனது உத்தரவுகளை மதிக்கவில்லை என்ற கோபத்தில் ராஜகண்ணப்பன் திட்டியதாக கூறப்படுகிறது.

சர்ச்சை
என்னை ஜாதி சொல்லி திட்டினார். எஸ்சி.. எஸ்சி என்று சொல்லி மீண்டும் மீண்டும் திட்டினார் . நான் சொல்வதை எதையும் நீ கேட்க மாட்டாயா.. சேர்மேன் சொன்னால் மட்டும்தான் கேட்பாயா என்று கேட்டார். என்னை ஜாதி ரீதியாக 6 முறை எஸ்சி என்று கூறி திட்டினார். எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது, என்று ராஜேந்திரன் அளித்த பேட்டிதான் பெரிய அளவில் வைரலாகி ராஜகண்ணப்பன் இலாக்கா மாற்றத்திற்கும் காரணமாக அமைந்துவிட்டது.

முதல்வர் ஸ்டாலின் துபாய்
ஆனால் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றே கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். நேற்று முதல்வர் ஸ்டாலின் துபாயில் இருந்து வந்ததும், சில மணி நேரங்கள் மட்டும் வீட்டில் உறங்கிவிட்டு அப்படியே அங்கிருந்து சென்னையில் வெள்ளநீர் வெளியேற்றும் அமைப்புகளைபார்வையிட்டார். அதன்பின் அமேசான் அலுவலகம் திறக்கும் நிகழ்விற்கு சென்றார். இந்த நிகழ்வு முடிந்த போதுதான் முதல்வருக்கு இந்த தகவல் சென்றதாக கூறப்படுகிறது.

உடனே எடுக்க சொன்னார்
இதையடுத்து தகவல் தெரிந்ததும்.. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றுங்கள் என்று கூறி இருக்கிறாராம். உடனே முடிவு எடுக்கப்பட்டு, ஆளுநருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் சில நிர்வாக ரீதியான paper works காரணமாக கொஞ்சம் தாமதம் ஆகி, பின்னர் மாலையில் முடிவு எடுக்கப்பட்டு, துறை மாற்றத்திற்கான கையெழுத்து ஆகி இருக்கிறதாம். எஸ்எஸ்சிக்கு போக்குவரத்து துறையை கொடுத்திடுங்க.. அமைச்சர் பதவியை "இப்போது" பறிக்க வேண்டாம் என்று முதல்வர் கூறியதாக தகவல்கள் வருகின்றன.

அப்பவே முடிவு
என்னதான் இந்த உத்தரவு இப்போது போடப்பட்டாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பே இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் எழிலழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. ஆம் தமிழ்நாடு அரசின் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜனின் அலுவலகம் எழிலகத்தில இருக்கிறது. மினி செக்ரேட்டரியேட் என எழிலகத்தைச் சொல்வது உண்டு.

எழிலகத்திற்கு உள்ளேயே ரெய்டு
நடராஜனின் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட பண கட்டுகளை கைப்பற்றியது விஜிலென்ஸ். துறையில் நடக்கும் பதவி உயர்வுகளுக்காகவும் ஃபேன்சி நெம்பர் ஒதுக்கீடுக்காகவும் வசூலிக்கப்பட்ட பணம் என்று நடராஜனே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். இவர் ராஜகண்ணப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே இந்த விஷயம் சீரியஸானது.. இதில் மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முதல்வர் ப்ரீ ஹேண்ட்
இதையடுத்தே முதல்வர் ஸ்டாலினும், இந்த முறைகேட்டில் பின்னனியில் இருப்பவர்கள் எல்லோரையும் விசாரியுங்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறாராம். லஞ்ச ஒழிப்புத்துறை இதில் தீவிர விசாரணை செய்து வருகிறது. இந்த லஞ்ச விவகாரத்தில் சில விஐபிக்கள் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதே ஸ்டாலின் இதில் ராஜகண்ணப்பன் மீது கண் வைத்துவிட்டார் என்கிறார்கள். அப்போதே இந்த விவகாரத்தை காரணமாக வைத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அமைச்சரவை மாற்றம் இருக்கும்.. அது துபாய் பயணத்திற்கு பின்புதான் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மீட்டிங் போட்டு எடுக்கலாம்
துபாய் பயணத்திற்கு பின் அமைச்சர் கூட்டம் கூட்டப்படும். அதன்பின் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் அப்படிப்பட்ட கூட்டம் எதுவும் நடக்காமல் அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜாதி ரீதியான பிரச்சனைகள் , ஊழல் புகார்கள் ஆட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்.. இதனால் முதல்வர் ஸ்டாலின் இதில் தீவிர கவனம் செலுத்துகிறார்... அதனால்தான் எதிர்க்கட்சிகள் இதை பெரிதாக்கும் முன் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலாக்கா மாற்றம் என்பது டீசர்தான்.. இனிமேல்தான் உண்மையான நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டு "புதியவருக்கு" அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications