ஜானகி முதல்வரானதும் பேசியது என்ன? எம்.ஜி.ஆர் மரணம் பற்றி சொன்னது என்ன?
சென்னை: வி.என். ஜானகியின் நூற்றாண்டு விழா நடைபெறும் வேளை இது. அவர் முதல்வராகப் பதவி ஏற்றபோது என்னப் பேசினார்? அவரது கணவர் இறந்த வேதனையை அவர் எப்படி வெளிப்படுத்தினார்? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்ததற்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்ற அவரது மனைவி வி.என்.ஜானகி. 1988 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றவர் 30 ஆம் தேதி வரை ஆட்சியிலிருந்தார். பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி அணியினர் இரட்டைப் புறாவிலும் ஜெயலலிதா அணியினர் சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். ஜெயலலிதா அணிக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததால், ஜானகி அதிமுகவை விட்டு முழுமையாக ஒதுங்கிக் கொண்டார். அதன்பின்னர் கட்சி ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

வைக்கம் நாராயணி ஜானகி என்பதுதான் வி.என்.ஜானகியின் முழுப் பெயர். அவர் 1923 நவம்பர் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு இது நூற்றாண்டு வேளை. அதைக் கொண்டாடும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகச் சிறப்பான விழா சில நாட்கள் முன்னர் சென்னையில் நடைபெற்றது. அதனையொட்டி பலரும் ஜானகியின் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் 1987 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இறந்த பிறகு அதிமுக மூத்த அமைச்சர்கள் பலர் ஜானகியைத்தான் ஆதரித்தனர். நடிகர் சிவாஜி கணேசன் கூட தனது கட்சியின் ஆதரவை ஜானகிக்குத்தான் அளித்திருந்தார். ஆனாலும், ஜானகியினால் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக வெற்றிபெற முடியவில்லை. அதை அவரே ஒப்புக் கொண்டு விலகியதால்தான் அதிமுக தலைவர்கள் பலர் இன்று அவரை பாராட்டிப் பேசி வருகின்றனர்.
சில மாதங்கள் முன்பாக சசிகலா மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்படுவாரா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, அதற்கு அவர், "எப்படி ஜானகி அம்மையார் கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டாரோ, அதேபோல் கட்சியின் ஒற்றுமையை மனதில் கொண்டு சசிகலா விலகிக் கொள்ள வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் வி.என்.ஜானகி முதல்வராகப் பதவியேற்ற பின்னர் 1988 ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ஒரு உரையை அவர் மக்களுக்காக நிகழ்த்தினார். அவர் அன்று பேசியது என்ன? அதில் இடம்பெற்றிருந்த செய்திகள் என்ன? ஜானகி பேசுகையில், "தாய்மார்களே.. என் வணக்கத்திற்குரிய பெரியோர்களே என் இதய தெய்வத்தின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..! உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பாலும் ஆசியாலும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

டாக்டர் புரட்சித் தலைவர் மறைவார் என்றோ அந்த இடத்தில் நான் அமர்வேன் என்றோ யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை நடைபெற்ற நிகழ்ச்சிகள் உருவாக்கிவிட்டன. டாக்டர் புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம், அவர் அமைத்த அரசு, கொள்கைகள் ஆகிய இவற்றைக் கட்டிக் காப்பாற்றுவதே நாம் அவருக்குச் செலுத்து நன்றிக் கடன். இந்தநிலையில் நான் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.
அவரது உயர்ந்த லட்சியங்கள், சிறந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த நான் ஒரு கருவிதான். அனைவரது கட்டளைகளுக்கும் மதிப்பளித்து இப்பொறுப்பை ஏற்றிருக்கிறேனே தவிர, தனித் தகுதி எனக்கு இருப்பதாக எண்ணவில்லை. லட்சோப லட்சம் தொண்டர்களின் உள்ளத்தில், உழைப்பில் என் இதய தெய்வம் வாழ்கிறார். என் தொண்டர்களின் கட்டளையை என் தெய்வம் இட்ட கட்டளையாக ஏற்று என்றும் பணிபுரிவேன். இதனை மிகுந்த அடக்கத்துடனும் பணிவுடனும் தெளிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் 1977இல் அமைந்த அண்ணா திமுக அரசை அறிஞர் அண்ணாவின் அரசு என்றே புரட்சித் தலைவர் அழைத்தார். அவர் பேரறிஞர் அண்ணாவின் வழியில் அரசையும் நடத்தினார்.
அந்த அண்ணாவின் அரசே தொடர்ந்து இப்போதும் புரட்சித் தலைவர் பாதையில் நடைபோடும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். கிராம மக்கள் புது வாழ்வு பெற அவர் நடத்த விரும்பிய சமூக நலத்திட்டங்கள், ஏழை எளியவர்களுக்கான திட்டங்கள், நலிந்த பிரிவினருக்கான திட்டங்கள், தாய்மார்களுக்கான திட்டங்கள் ஆகிய அனைத்தும் சீரான முறையில் அமல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக ஒற்றுமையைக் கட்டிக் காப்பதிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் புரட்சித் தலைவர் காட்டிய கவனத்தையும் கண்டிப்பையும் நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம்.
மைய அரசுடன் தொடர்ந்து இணக்கமான உறவை வளர்த்து புரட்சித் தலைவர் ஒரு நல்ல அடிப்படைத் தளத்தை அமைத்து தந்துள்ளார். அந்த அடிப்படையை நாங்கள் மேலும் வலுப்படுத்துவோம். நாட்டு நலனை முன்னிறுத்தி பிரதமர் எடுக்கும் முடிவுகளைத் தொடர்ந்து ஆதரிப்போம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து வாதாடிப் பெற்றிட இந்தச் சமூக உறவை நாங்கள் பெரிதும் பயன்படுத்துவோம்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் புரட்சித் தலைவர் என்ன அணுகுமுறைகளாகக் கொண்டாரோ அதையே இந்த அரசும் கடைப்பிடிக்கும். தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் தனிக் கவனம் செலுத்தி எங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் தமிழக மக்கள் சார்பாகப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு இந்த நேரத்தில் அன்பான வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
கனத்த இதயத்துடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நான் கடமையாற்றிடவும் வந்துள்ளேன். எந்தத் தமிழக மக்களை என் இதய தெய்வம் உயிருக்கு உயிராக நேசித்தாரோ அந்த மக்களின் சேவைக்காக என் எஞ்சிய வாழ்நாளைக் காணிக்கையாகுகிறேன். இதுதான் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்கான உண்மையான பொருள்.
அவரது ஆன்மா சரியான ஒளியைக் காட்டி சரியான பாதையில் அழைத்துச் செல்லும் என்றும் திடமாக நம்புகிறேன். அவருடன் வாழ்ந்த நீண்ட நெடிய காலங்களில் சுக துக்கங்களில் பங்கேற்று அவரது நிழலும் தீண்டாமல் பணிவிடை செய்ய எனக்குக் கிடைத்த பெரும்பேறு யாருக்கும் கிடைக்காத ஒன்றாகும். சுகத்தில் துள்ளாமலும் துக்கத்தில் துவலாமலும் இருக்கக்கூடிய அனுபவத்தை அவர் எனக்குப் போதித்துள்ளார். முடிவுகளை எடுப்பதில் அவர் காட்டிய பக்குவம் எனக்கு என்றும் துணையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இது உங்கள் அரசு. மக்கள் அரசு. இதன் தலைமையை ஏற்றுள்ள நான் உங்களுக்குக் கிடைத்துள்ள முதல் சேவகி. என்னை உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக, அன்புச் சகோதரியாக ஏற்று அன்பும் ஆதரவும் ஆசியும் வழங்கிவிடுங்கள். எனது இதய புண்ணிற்கு இதுவே அருமருந்தாக அமையும்" என்று பேசி இருந்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications