சென்னை கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசனில் அதிர்ச்சி.. கையை வெட்டிக் கொண்ட பெண் போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் போலீஸையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் விடுமுறை தராததால் விரக்தி அடைந்த பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் நிலையத்திலேயே தன் கையை வெட்டிக்கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு பணியில் உள்ளவர்கள் மற்றும் தனியார் வேலையில் உள்ளவர்கள் நினைத்த நேரம் விடுமுறை எடுத்து சந்தோஷமாக விரும்பிய இடங்களுக்கு போக முடியும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் தனியார் துறை மற்றும் ஐடி துறையில் உள்ளவர்கள் சொந்தங்களுடன் திருமணம், கோவில், விஷேசங்களுக்கு செல்ல எந்த தடையும் ஏற்படாது. பொங்கல், தீபாவளி உள்பட பண்டிகைகளும், கொண்டாட்டங்களுக்கும் இவர்கள் வாழ்வில் எந்த பிரச்சனையும் பெரியதாக வராது.

ஆனால் காவல் துறையில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் பெரும்பாலும் கனவாகவே உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வேலையில் உள்ளவர்கள் காவலர்கள், இதேபோல் குற்றமே நடக்காமல் பார்க்க வேண்டிய வேலையிலும் உள்ளவர்கள காவலர்கள்.. குற்றவாளிகள் செயல்களால் கோபம் அடைந்து தன்னிலை மறந்து நடந்துவிடுவது இவர்களது வாழ்வில் அடிக்கடி நடக்கும் ஒன்று.
மன அழுத்தம் என்கிற நோய்க்கு எளிதாக ஆளாகும் ஒரு அரசு ஊழியர்கள் என்றால் அது கண்டிப்பாக காவல்துறையில் வேலை செய்பவர்கள் தான். அவர்களின் மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாத நிலை தான் முக்கிய காரணம். உயர் அதிகாரிகள் விடுமுறை தர மறுப்பதாக குற்றம்சாட்டி பல காவலர்கள் வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டு மனக்குமுறலை வெளியிட்டு வருகிறார்கள்.
காவல்துறையில் உள்ள பெரிய பிரச்சனை என்பது விடுமுறை இல்லாதததை குறிப்பிடலாம். வார விடுமுறை, 8மணி நேர பணி நேரம், முக்கிய நாட்களில் விடுமுறை, திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள், முக்கிய உறவினர்களின் திருமணத்திற்கு செல்ல விடுமுறை போன்ற கோரிக்கைகள் பல நாட்களாக உள்ளது. அரசு தான் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரவு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், தனக்கு ஒரு மாதம் மருத்துவ விடுமுறை கேட்டிருக்கிறார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வருவதால், விடுமுறை கொடுக்க இன்ஸ்பெக்டர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் போலீஸ், மாநகர உதவி கமிஷனரை நேரில் சந்தித்து மருத்துவ விடுமுறைக்கான காரணத்தை கூறி அனுமதியை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு பிறகும், விடுமுறை கொடுக்க இன்ஸ்பெக்டர் உறுதியாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், வருத்தம் அடைந்த அந்த பெண் போலீஸ், விரக்தி அடைந்து போலீஸ் நிலையத்திலேயே சிறிய கத்தியால் தனது கையில் வெட்டி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கையில் ரத்தம் வேகமாக வெளியேறிக் கொண்டே இருந்தது , சக போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடலின் மற்ற இடங்களில் அந்த பெண் போலீஸ் வெட்ட போன நிலையில் சக போலீசார் தடுத்து, காப்பாற்றினார்கள். காயம் அடைந்த அந்த பெண் போலீஸ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications